தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், அடுத்த 3 தினங்களுக்கு மத்திய வங்க கடல், ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் சென்னை மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வடதமிழகத்தின் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்க க்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்றும் தெரிவித்தார்.
மத்திய வங்கக் கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என்றும், அடுத்த 3 தினங்களுக்கு மத்திய வங்க கடல், ஆந்திர கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் சென்னையில் இடைவெளிவிட்டு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சையில் 11செண்டி மீட்டரும், பூந்தமல்லி, வல்லம், புழல் பகுதியில் 7 செண்டி மீட்டர் பதிவாகியுள்ளதாகவும் இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.