விஜய் ஹசாரே தொடர்: முதல் வெற்றியை பதிவு செய்தது தமிழக அணி

223

விஜய் ஹசாரே தொடரில் விளையாடி வரும் தமிழ்நாடு அணி, ஆந்திரா மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவியது. இந்நிலையில், நேற்று ஜார்க்கண்ட்டை எதிர்கொண்ட இந்திய அணி, அபாரமாக ஆடி வெற்றி பெற்றது. இந்தூரில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி, தொடக்க வீரராக இறங்கிய பாபா அபரஜித்(57), ஷாருக்கான்(51), கௌசிக்(55) ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கால் 50 ஓவரில் 266 ரன்கள் அடித்தது.

சையத் முஷ்டாக் அலி தொடரில் சிறப்பாக ஆடி, தமிழ்நாடு அணிக்காக பல போட்டிகளை வெற்றிகரமாக ஃபினிஷிங் செய்துகொடுத்த ஃபினிஷர் ஷாருக்கான், விஜய் ஹசாரே தொடரிலும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். இந்நிலையில், இந்த போட்டியிலும் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்தார் ஷாருக்கான். 267 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ஜார்க்கண்ட் அணியில் விராட் சிங்(49), சுமித் குமார்(40) ஆகிய 2 பேட்ஸ்மேன்கள் மட்டுமே நன்றாக ஆடினர். 11வது வீரராக இறங்கிய ராகுல் சுக்லா சிறப்பாக ஆடி 42 ரன்கள் அடித்தார். ஆனாலும் அந்த அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இஷான் கிஷன், உத்கர்ஷ் சிங், குமார் தியோப்ரத் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வெளியேறியதால், அந்த அணியால் 50 ஓவரில் 199 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 67 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபார வெற்றி பெற்றது.

Advertisement