1 ரூபாய் இட்லி பாட்டியின் நல்ல மனசுக்கு கிடைத்த பரிசு

1248

கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் பாட்டியின் கனவை நிறைவேற்றும் வகையில், அவருக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க மகேந்திரா குழுமம் முன்வந்துள்ளது. 

கோவை ஆலந்தூரை அடுத்த வடிவேலம்பாளையம் பகுதியில் வசித்து வரும் 85 வயதான கமலாத்தாள் என்ற பெண், தள்ளாத வயதிலும் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று பிரபலமானார். தினந்தோறும் அதிகாலை 4 மணிக்கு எழுந்திருக்கும் கமலாத்தாள், யாருடைய உதவியும் இல்லாமல், இட்லி கடை நடத்தி வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இட்லி கடையை தொடங்கிய அவர், ஆரம்பத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்று வந்தார். பின்னர் விலைவாசி உயர்வால், படிப்படியாக உயர்ந்து தற்போது ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்று வருகிறார்.

பாட்டி கடையின் சுவையால், பொதுமக்கள் பலர் தினந்தோறும் பாட்டி கடைக்கு வரும் வாடிக்கையாளராக மாறிவிட்டனர். மிக எளிமையான முறையில் கடைகளை நடத்தி வரும் பாட்டி, பெருந்தொற்று ஊரடங்கு காலத்திலும், தனது சேவையை நிறுத்தாமல், மிகக்குறைந்த விலையில் பலரது பசியை போக்கி வந்தார்.

பாட்டியின் சேவையை பாராட்டி மகேந்திரா குமத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா, கிரைண்டர், மிக்சி, கியாஸ் அடுப்பு ஆகியவற்றை வழங்கினார்.

மேலும் பாட்டிக்கு நிலம் வாங்கி வீடு கட்டிக்கொடுக்க ஆனந்த் மகேந்திரா முன்வந்தார். தற்போது பாட்டியின் வீட்டு கட்டுமான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

Advertisement