ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை..!

335

தமிழக பா.ஜ.,தலைவராக இருந்த தமிழிசை, தெலுங்கானா மாநில கவர்னராக , கடந்த வாரம் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து ஐதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவர், கவர்னராக பதவியேற்று கொண்டார்.

தமிழிசைக்கு, தெலுங்கானா ஐகோர்ட் தலைமை நீதிபதி ரகுவேந்திர சிங் சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தமிழிசைக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், அம்மாநில அமைச்சர்கள், தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள், வேலுமணி, ஜெயக்குமார், தங்கமணி, தேமுதிக பொருளாளர் பிரேமலதா, சரத்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கவர்னராக பதவியேற்ற பின்னர், தமிழிசை, தனது தந்தை குமரி ஆனந்தனிடம் ஆசி பெற்றார். தெலுங்கானாவின் முதல் பெண் கவர்னர் என்ற பெருமை தமிழிசைக்கு கிடைத்துள்ளது.

முன்னதாக கவர்னராக பதவியேற்க, ஐதராபாத் வந்த தமிழிசையை முதல்வர் சந்திரசேகர ராவ் வரவேற்றார். பின்னர், நடந்த போலீசார் அணிவகுப்பு மரியாதையையும் தமிழிசை ஏற்று கொண்டார்.

Advertisement