எதிர்கட்சியில் நீங்கள் இருந்தால் வெற்றி எங்களுக்கே.., தமிழிசை அதிரடி

242

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ஸ்ரீவைகுண்டம் அருகே தென்திருப்பேரையில் நடந்த பா.ஜனதா பொதுக்கூட்டத்தில் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்,

பாரத பிரதமர் மோடி தலைமையில் தான் நாடு பாதுகாப்பாக உள்ளது. நாட்டின் நலனுக்காகவே 24 மணி நேரமும் கடந்த 5 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறார். பாரதியஜனதா அரசு விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரமும் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு தமிழக அரசு ரூ.2 ஆயிரமும் வழங்கி வருகிறது.இதற்காக நீங்கள் நீண்ட வரிசையில் நிற்கவேண்டாம், இடைத்தரகர்கள் கிடையாது. நேரடியாக அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் லஞ்சம், ஊழல் தலைவிரித்து ஆடியது. ஆனால் மோடி ஆட்சியில் ஒரு ஊழல் என்று கூற முடியுமா?

தமிழ்மொழி ஏன் வழக்காடு மன்றத்தில் இல்லை என ஸ்டாலின் கேட்கிறார். நீங்கள் 5 முறை தமிழகத்தை ஆண்டும் ஏன் வளர்க்கவில்லை. நீங்கள் தமிழ் மொழியை வளர்க்கவில்லை கனிமொழியை தானே வளர்த்தீர்கள்.

மு.க.ஸ்டாலினுக்கு இன்னும் அரசியலே பிடிபடவில்லை. இது வரையிலும் வைகோ இருந்த கூட்டணி வெற்றி பெற்றது கிடையாது. எனவே தான் ம.தி.மு.க.வை தி.மு.க. கூட்டணியில் இருந்து விரட்டி விடுவதற்காக, அந்த கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டது.

ஆனாலும் அந்த ஒரு தொகுதியையும் பெற்றுக்கொண்டு தி.மு.க. கூட்டணியில் போட்டியிடுவதற்கு ம.தி.மு.க. தயாராகி விட்டது. தி.மு.க.வினர் பகுத்தறிவாளிகள் என்று கூறிக்கொண்டு, தலையில் முக்காடு போட்டுக்கொண்டு கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் நாம் ஆன்மிகவாதிகள் என்று கூறிக்கொண்டு தலைநிமிர்ந்து கோவிலுக்கு சென்று வருகிறோம்.

இறுதியாக தென் திருப்பேரை கரிசல் மண் அல்ல. அது காவி மண். நாங்கள் நிச்சயம் வெற்றிபெறுவோம். மீண்டும் தாமரை மலர்ந்தே தீரும்.