தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா? – கேரளாவை நாடும் தமிழக முதல்வர்

543

தமிழகத்திற்கு தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தர முடியுமா? எனக் கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பருவ மழை பெய்யாததால் தமிழ்நாடு முழுவதும் குடிதண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் 4 குடிநீர் ஏரிகளும் வறண்டு விட்டதால் இந்த ஆண்டு தண்ணீர் பஞ்சம் மக்களை மிக கடுமையாகப் பாதித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தந்து உதவ கேரளா முன்வந்துள்ளது.

கேரளா குடிநீர் வாரியம் சார்பில் 20 லட்சம் லிட்டர் குடிநீரை அனுப்ப முடியும் என்றும், திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் அந்த தண்ணீரை கொண்டு வர முடியும் என்றும் கூறியுள்ளனர்.

இந்நிலையில், தண்ணீர் பிரச்சனை தொடர்பாக சென்னையில் இன்று ஆலோசனை நடத்திய முதலமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்திற்கு ஒருமுறை 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவதாக கூறியதற்கு கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். தினந்தோறும் 20 லட்சம் லிட்டர் தர முடியுமா? என கேட்டு கேரள முதல்வருக்கு கடிதம் எழுத முடிவு எடுத்துள்ளோம்.

எனது வீட்டுக்கு லாரிகள் மூலம் அதிக அளவு தண்ணீர் வழங்குவதாக கூறப்படுவது தவறானது. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் வீடுகளுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வழங்குவது வழக்கமானதுதான்.

அமைச்சர்களின் குடும்பங்களுக்கு மட்டுமே இவ்வளவு தண்ணீர் பெறப்படுவதில்லை. அமைச்சர்களை சந்திக்க வருபவர்கள் மற்றும் செய்தியாளர்களுக்கும் சேர்த்துதான் தண்ணீர் பெறப்படுகிறது.

காவிரி நீர் பகிர்வு தொடர்பான எந்த கோரிக்கையாக இருந்தாலும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் முன்பு வைக்கப்படும். மேலும் லாரிகளில் தண்ணீர் சப்ளை தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of