அரசு துறையில் கருப்பு ஆடுகள்.. சென்னை உயர்நீதிமன்றம் வேதனை..

417

கோவை வெள்ளக்கிணறு கிராமத்தில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு முறையாக வெளியிடப்படவில்லை என்றும், நீண்ட காலத்திற்கு பிறகு அவசரகதியில் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

திட்டத்தை படிப்படியாக அமல்படுத்தி வருவதாகவும், வழக்கு தொடர்புடைய நிலம் குறித்த உண்மை ஆவணங்கள் காணாமல் போய்விட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிலம் கையகப்படுத்தும் பணிகள் காலாவதியாகிவிட்டதால், அந்த நடைமுறைகளை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், ஆவணங்கள் மாயமானது குறித்து மாநில அரசு விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக துறை ரீதியான நடவடிக்கையும், தனி நபர்களுக்கு தொடர்பிருந்தால் குற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.

பொது நலனை கருத்தில் கொண்டு அரசு திட்டங்களை அமல்படுத்தும்போது, அரசு துறையில் உள்ள கருப்பு ஆடுகள் சுயலாபத்திற்காக வளர்ச்சித் திட்டங்களுக்கு முட்டுக்கட்டையிடுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார். அந்த கருப்பு ஆடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது நலனில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்

Advertisement