7 பேரை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை – தமிழக அரசு

380

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேரை விடுதலை செய்து உத்தரவிட அதிகாரம் இல்லை என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளை விடுதலை செய்ய கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரை மீது எந்த நடவடிக்கையும் என கூறி, சிறையில் உள்ள நளினி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள், சுப்பையா, பொங்கியப்பன அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து, அரசு தரப்பிலும், நளினியின் வழக்கறிஞர் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் பரிந்துரைக்காக அனுப்பியது என்றும், அமைச்சரவை பரிந்துரைத்தாலும் அதுதொடர்பாக எந்த உத்தரவையும் அரசு பிறப்பிக்கவில்லை என தெரிவித்தார்.

மேலும், ஆளுநருக்கு அனுப்பிய தீர்மானம் என்பது பரிந்துரை மட்டுமே என குறிப்பிட்ட அவர், இதில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க அரசுக்கு அதிகாரம் இல்லை என்று சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு நளினி சட்டப்பூர்வ காவலில் இருக்கிறாரா? அல்லது சட்டவிரோத காவலில் இருக்கிறாரா? என்பது குறித்து தெளிவுபடுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர், வழக்கு விசாரணை பிப்ரவரி 18ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement