ஹைட்ரோ கார்பன் திட்டம்! சட்டசபையில் கத்திரிக்காய் கதை சொன்ன அமைச்சர்!

500

சட்டப்பேரவையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து விவாதிக்க கோரி மன்னாகுடி திமுக எம்.எல்.ஏ. டி.ஆர்.பி.ராஜா சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கியது யார் என்பது குறித்து அதிமுக – திமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

தற்போது வரை ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை என்றும் இனியும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார். திமுக ஆட்சி காலத்தில் தான் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

அப்போது குறிக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்,

“திமுக ஆட்சி காலத்தில ஆய்வு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது, திட்டத்திற்கு அனுமதி வழங்கவில்லை”

என்று விளக்கம் அளித்தார்.

உடனே குறுக்கிட்டு பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்,

“கத்திரிக்காயை சாப்பிடுகிறோம் என்றால் அப்படியே சாப்பிட முடியாது வெட்டி, சுத்தம் செய்து சமைத்த பிறகே சாப்பிட முடியும்.

அது போல ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்ப்பதாக சொல்லும் நீங்கள், அது தொடர்பாக கிணறு தோண்ட ஏன் ஆய்வு நடத்த அனுமதி கொடுத்தீர்கள்? என்பதை கூறுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்கிறோம்.

நாங்கள் இப்படி ஆய்வுக்கு கூட அனுமதி கொடுக்கவில்லை. பிறகு ஏன் திமுக சார்பில் போராட்டம் நடத்துகிறீர்கள்? மனித சங்கிலி போராட்டம் நடத்தியது எதற்காக? பொது மக்களை திரட்டி போராட்டம் நடத்துவதன் நோக்கம்தான் என்ன?”

என்றார்.

“ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழக அரசு தடுத்தாலும், அதையும் மீறி திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முயற்சி செய்வதால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறுகிறது” என்று ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம்,

“தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்பது விதியில் இருப்பதை சுட்டிக்காட்டி பேசினார்.

வரும் காலங்களில் திட்டத்திற்கு ஆய்வு நடத்த முடியாது, எரிவாயும் எடுக்கவும் முடியாது”

என்று அமைச்சர் சி.வி.சண்முகம் திட்டவட்டமாக தெரிவித்தார்.