ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் : ஆசை வார்த்தை கூறும் வேதாந்தா நிறுவனம்

234
Sterlite

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக தருண்அகர்வால் ஆய்வறிக்கை மீதான விசாரணையில் தமிழக அரசு, வேதாந்தா நிறுவனம் ஆகிய இருதரப்பினரிடையே காரசாத வாதம் நடைபெற்றது.

ஸ்டெர்லைட் ஆலையை சில நிபந்தனைகளுடன் நடத்த அனுமதி வழங்கலாம் என தருண் அகர்வாலின் ஆய்வறிக்கை மீதான வாதம் இன்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நடைபெற்றது.

வழக்கின் விசாரணை தொடங்கியதும், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அப்போது, தமிழக அரசின் கருத்துக்களை முதலில் கேட்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஸ்டெர்லைட் மற்றும் தமிழக அரசு தரப்பினரிடையே காரசார விவாதம் நடைபெற்று வருகிறது.

அப்போது, தூத்துக்குடியில் 100 கோடி ரூபாய் மதிப்பில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க தயார் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா குழுமம் வாதிட்டது.

ஆலை பராமரிப்பு செய்ய எங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது.
இதனிடையே, ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்த நிலையில், பசுமை தீர்ப்பாய நீதி பதி ஏ.கே. கோயல் அனுமதி மறுத்துள்ளார்.