தமிழ் ராக்கர்ஸ் மீண்டும் சேட்டை – திரைக்கு வரும் முன்பே இணையத்தில் வெளியான விஜய் படம்

507

விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படம், திரையில் வெளியாகும் முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

சமீப காலமாக தமிழ் சினிமாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதப்படும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம், புதிய தமிழ் படங்களை திருட்டுத்தனமாக தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது. பல வருடங்களாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும், வினியோகஸ்தர்களுக்கும் பெரும் சவாலாக இருந்து வரும் இவர்களை பிடிக்கவோ, தளத்தை முடக்கவோ முடியவில்லை.

தீபாவளி அன்று விஜய் நடித்து வெளிவந்த ‘சர்கார்’ படத்தை வெளியான அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில், ஒரு மிரட்டல் வெளியானது. அதே போன்று அன்றே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் படம் வெளியிடப்பட்டது. இது, தமிழ் பட உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது மட்டுமில்லாமல் சில தினங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடித்து வெளிவர இருக்கும் ‘2.0’ படத்தையும் வெளியான அன்றே வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் பெயரில் மிரட்டல் விடுத்தது.

இந்நிலையில், விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் வரும் நவம்பர் 17ம் தேதி அன்று வெளியாக இருந்த ‘டாக்ஸிவாலா’ திரைப்படத்தை தமிழ் ராக்கர்ஸ் தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் படக்குழுவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘நோட்டா’ திரைப்படம் தமிழ் ராக்கர்ஸில் வெளியானது குறிப்பிடத்தக்கது.