ஓட்டலுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் தாக்குதல் – 8 போலீசார் பலி

315

ஆப்கானிஸ்தானில் அரசு படைகளுக்கும், தலீபான்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

அரசு படைகளுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படை அங்கு முகாமிட்டு உள்ளது. உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டுவந்து, ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட தலீபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் தலைமையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்த நிலையில் பத்கிஸ் மாகாணத்தின் தலைநகர் குவல்-இ-நாவ் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குள் தலீபான் பயங்கரவாதிகள் 5 பேர் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்தனர்.

அங்கு அவர்கள் தங்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. இது குறித்த தகவல் கிடைத்ததும், போலீசார் மற்றும் பாதுகாப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஓட்டலை சுற்றிவளைத்தனர்.

அதனை தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. சுமார் 5 மணி நேரம் இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே சமயம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பொதுமக்கள் உள்பட 18 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of