கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி

317

உடுமலை – பொள்ளாச்சி ரோட்டில் உள்ள கெடிமேடு பிஏபி வாய்க்காலில் கார் ஒன்று கவிழ்ந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் நீரில் மூழ்கி பலியானார்கள்.கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய போது இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது.  கோவை மசக்காளிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (45). கேபிள் ஆபரேட்டர். இவரது மனைவி சித்ரா (40). மகள்கள் பூஜா (8), தன்யா (3) பிரகாஷின் அண்ணன் பன்னீர்செல்வத்தின் மனைவி லதா(42) பன்னீர்செல்வத்தின் மகன் கவியரசு (11), மகள் தாரணி (9), பிரகாஷின் அக்காள் சுமதி (50) ஆகிய 8 பேரும் நேற்று முன்தினம் கோவையில் இருந்து பழனி முருகன் கோயிலுக்கு காரில் கிளம்பினர்.

 

காரை பிரகாஷ் ஓட்டி சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு சாமி தரிசனத்தை முடித்து கொண்டு, இரவு 11 மணிக்கு மேல் பழனியில் இருந்து கோவைக்கு காரில் கிளம்பியுள்ளனர்.

நள்ளிரவு ஒரு மணியளவில் உடுமலை-பொள்ளாச்சி ரோட்டில் கெடிமேடு பகுதியில் கார் வந்து கொண்டிருந்தது. அங்கு ரோட்டின் அருகே பிஏபி வாய்க்கால் செல்கிறது. கார் அப்பகுதியை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்து கொண்டு வாய்காலுக்குள் விழுந்தது. வாய்க்காலில் 10 அடி உயரத்திற்கு நீர் சென்று கொண்டிருந்தது.

இதில் காரின் முன்புறம் மற்றும் பின்புறமுள்ள கண்ணாடி உடைந்து நீர் புகுந்து மூழ்கியுள்ளது. காரிலிருந்த அனைவரும் தூக்கத்தில் இருந்ததால் வெளியேற முடியவில்லை. காரும் இடது புற வாய்க்கால் விழுந்து இழுத்து செல்லப்பட்டு, வலது புறத்தில் தடுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், இரவு 2.30 மணியளவில் ரோந்து சென்ற கோமங்கலம் எஸ்.ஐ. முஸ்தபா கால்வாய் பாலத்தின் தடுப்பு சுவர் உடைந்துள்ளதை கண்டு சந்தேகமடைந்து டார்ச்லைட் மூலம் வாய்க்காலை பார்த்தபோது கார் ஒன்று கிடந்துள்ளதை கண்டுள்ளார்.

பின்னர் பொள்ளாச்சி தீயணைப்பு மற்றும் கோமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதன்பின கிரேன் வரவழைக்கப்பட்டு, நேற்று காலை 6 மணியளவில் மீட்கும் பணி தொடங்கியது. ஒன்றரை மணி நேரத்திற்கு காருக்குள் 6 பேர் மட்டும் சடலமாக மீட்கப்பட்டனர். 2 பேர் மாயமாகியிருந்தனர்.

பின்னர் ஒரு ஆண், 3 பெண் மற்றும் 2 குழந்தைகள் ஆகிய 6 பேரின் சடலத்தை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காரில் இருந்த பிரகாஷின் மகள் தன்யா(3), பன்னீர்செல்வத்தின் மகன் கவியரசு (11) ஆகியோர் இருந்ததும் அவர்கள் மீட்கப்படாமல் மாயமானதும் தெரியவந்தது.

இவர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். பிஏபி பிரதான வாய்க்கால் திருமூர்த்தி அணையில் இருந்து 124 கிமீ நீளமுடையது. வாய்க்காலின் பல இடங்களில் இரும்பு கம்பி தடுப்புகள் உள்ளதால் குழந்தைகள் உடல் எங்காவது சிக்கியிருக்கலாம் என்பதால் பிஏபி வாய்க்கால் கரைவழியாக சென்று தேடுதல் வேட்டையை துவக்கியுள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of