இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,200-ஆக அதிகரிப்பு

717

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 1,200-ஆக அதிகரித்துள்ளது.

இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில்10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன. இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது.

பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.

இந்நிலையில், நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 200ஐ எட்டியது. பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைகளில் பலர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாதிப்புகள் அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

காணாமல் போனவர்களின் போட்டோக்களை உறவினர்கள் பேஸ்புக்கில் வெளியிட்டு தேடிவருகின்றனர்.

 

Advertisement