கோவில்பட்டி அருகே மின் வயர் அறுந்ததால், ரயில் போக்குவரத்து பாதிப்பு

528

கோவில்பட்டி அருகே மின் வயர் அறுந்ததால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் ரயில் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் நேற்று மாலை பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக நல்லி என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தின் மீது செல்லும் மின்சார வயர் அறுந்து விழுந்தது.

இதனால் திருநெல்வேலியில் இருந்து மும்பை தாதர் வரை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் மற்றும் ஜம்மு தாவி வரை செல்லும் ஜம்முதாவி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களும் கோவில்பட்டி ரயில் நிலையத்திலேயே நிறுத்தப்பட்டன.

அதேபோல், தூத்துக்குடியில் இருந்து மைசூர் செல்லும் விரைவு ரயில், குருவாயூர் விரைவு ரயில், கோயம்புத்தூர் நெல்லை பயணிகள் ரயில் உள்ளிட்டவை ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு செல்லக் கூடிய அனைத்து ரயில்களும் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. பல மணி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

Advertisement