அடடே இதுவல்லவா குடும்பம்..! – 150 வயதான மரத்தை வெட்ட மனமின்றி சுற்றி வீடு கட்டி அசத்தல்..!

993

மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று, மரத்தை வெட்ட மனமில்லாமல் அதனை சுற்றி வீடு கட்டியுள்ளது, மக்களிடையே ஆச்சரியத்தையும் பாராட்டையும் பெற்று வருகிறது.

வீடு, கடைகள் என கட்டடங்களை கட்டுவதற்கு அந்த இடத்தில் உள்ள மரங்களை வெட்டி, பின்னர் அங்கு கட்டடங்கள் கட்டுவர். ஆனால், மரங்கள் மற்றும் இயற்கை மீது அதீத பிரியம் கொண்ட குடும்பம் ஒன்று சற்று வித்தியாசமான முடிவு எடுத்து, மரங்கள் மீதான அவர்களின் காதலை நிரூபித்துள்ளனர்.

மத்தியப்பிரதேசத்தின் ஜபல்புர் பகுதியை சேர்ந்த கேஷ்வர்னி குடும்பம், அவர்களது பழங்காலத்து வீட்டை மாற்றி அமைக்க முடிவு செய்தனர். ஆனால், அதற்கு இடையூறாக அந்த வீட்டின் அருகில் வளர்க்கப்பட்டு வந்த 150 வயது அத்தி மரம் இடையூறாக இருந்தது.

மரத்தை வெட்ட மனமில்லாமல் இருந்த அவர்கள், நீண்ட யோசனைக்கு பின்னர், மரத்தை சுற்றியே வீடு கட்ட முடிவு செய்து, அவ்வாறு வீடு கட்டி முடித்தனர். அத்தி மரத்தின் பெரிய தண்டு பகுதி, வீட்டின் நடுவில் இருப்பதுபோன்று அந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், அவர்களது வீட்டிற்கான வித்தியாசமான அடையாளமாகவும் அந்த வீடு இருக்கிறது.

அத்தி மரம் மிக புனிதமானது எனவும் அதில் கடவுள் குடிகொண்டிருப்பதாகவும் தெரிவித்த கேஷ்வர்னி குடும்பத்தினர், மரங்களை வெட்டுவது மிக சுலபம்..

ஆனால், வளர்ப்பது மிக கடினம் எனவும் தெரிவித்தனர். தெருவின் ஓரமாக அமைந்துள்ள இந்த வித்தியாசமான 4 மாடி கட்டடத்தை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.