ரஃபேல் ஆவணங்களை நாங்கள் திருடவில்லை – எதையும் சந்திக்கத் தயாராகவுள்ளோம் -தி இந்து குழுத் தலைவர் என்.ராம் ஆவேசம்

719

“ரஃபேல் தொடர்பான ஆவணங்களை நாங்கள் திருடவுமில்லை, விலை கொடுத்தும் வாங்கவில்லை. அதனால் எதையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம்” என தி ஹிந்து குழுமத்தின் தலைவரான என். ராம் தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் தஸால் நிறுவனத்திடமிருந்து இந்திய ராணுவம் ரஃபேல் விமானங்களை வாங்குவது தொடர்பாக நிகழ்ந்த பல்வேறு விதிமுறை மீறல்களை, தொடர்ந்து அம்பலப்படுத்தி வரும் என். ராம், இந்த ஆவணங்கள் திருடப்பட்டு, வெளியிடப்பட்டதாக நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருப்பது குறித்தும் ரஃபேல் விவகாரத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படாதது குறித்தும் விரிவாகப் பேசினார்.

கே ள்வி : தற்போதைய ரஃபேல் ஒப்பந்தத்தில் வங்கி உத்தரவாதம் அளிக்கப்படவில்லை என்று கூறியிருக்கிறீர்கள். இதில் என்ன பிரச்சனை என்று விளக்க முடியுமா?

பதில்: ரஃபேல் விவகாரம் தொடர்பாக இதுவரை நாங்கள் ஐந்து புலனாய்வுக் கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறோம். முதலில், ரஃபேல் விமானத்தின் விலை குறித்த கட்டுரை. அதாவது போருக்குத் தயாராக இருக்கும் ஒரு ரஃபேல் விமானத்தின் விலை என்ன என்பதைச் சொல்ல முதலில் அரசு மறுத்துவிட்டது.

அதை நாங்கள் வெளியிட்டோம். தற்போது நாம் வாங்கியிருக்கும் விலையை 2007ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 40 சதவீதம் அதிகம். 2012ஆம் ஆண்டின் விலையோடு ஒப்பிட்டால் 14 சதவீதம் அதிகம் என்பதை தெரிவித்தோம். பேரம்பேசி விலையைக் குறைத்திருக்கலாம் என்பதை அந்தக் கட்டுரையில் நாங்கள் சொல்லியிருந்தோம்.

இரண்டாவதாக, அரசும் பாதுகாப்பு அமைச்சகமும் தனித்தனியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள் என்பதை வெளிப்படுத்தினோம்.

மூன்றாவதாக, ஊழலுக்கு எதிராக இருந்த விதிமுறைகளை நீக்கப்பட்டது குறித்தது வெளிப்படுத்தினோம்.

நான்காவதாக, இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்த நிபுணர்கள் குழுவின் குறிப்புகளை அம்பலப்படுத்தினோம். இந்த விவகாரத்தில் நிபுணர் குழுவுக்கு பல விஷயத்திலும் கருத்து மாறுபாடு இருந்தது. விலை அதிகம், வங்கி உத்தரவாதம் தேவை அல்லது அரசின் உத்தரவாதம் தேவை, தஸாலின் நிதி நிலை சரியில்லாமல் இருந்ததால், நமக்கு உத்தரவாதம் தேவை என்றெல்லாம் கூறியிருந்தார்கள். அதை வெளியிட்டோம்.

அதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது, பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த நிதி ஆலோசகரான சுதான்ஷு மொஹந்தியிடம் இது தொடர்பான கோப்புகள் கடைசி நேரத்தில் கொடுக்கப்பட்டு ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். தனக்கு நேரமே இல்லை என்று சொன்ன அவர், சில ஆலோசனைகளைச் சொன்னார்.

“அதாவது விமானம் வந்து சேர்வதற்கு 18 மாதங்களுக்கு முன்பாகவே 60 சதவீதப் பணத்தை நாம் கொடுக்கிறோம். அப்படியிருக்கும் நிலையில், escrow கணக்கு ஒன்றைத் துவங்கி, இரு அரசுகளும் ஒப்புக்கொண்டால்தான் தஸால் ஏவியேஷனுக்கும் ஆயுதங்களை வழங்கும் ‘எம்பிடிஏ பிரான்ஸ்’ நிறுவனத்திற்கும் பணத்தை ரிலீஸ் செய்ய வேண்டும்” என்ற ஆலோசனையை அவர் முன்வைத்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை.

இந்திய பேச்சுவார்த்தைக் குழுவில் இருந்தவர்கள் இந்த விஷயங்களைத் தொடர்ந்து வலியுறுத்தினாலும் பிரதமர் அலுவலகமும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும் இது தொடர்பாக தனியாகப் பேச்சுவார்த்தைகளை நடத்தியதால், நம் குழுவின் பேரம்பேசும் திறன் முற்றிலும் இல்லாமல் போனது. எதைக் கேட்டாலும், இது தொடர்பாக ஏற்கனவே பேசித் தீர்க்கப்பட்டுவிட்டது என்பதே தஸால் தரப்பின் பதிலாக இருந்தது என அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of