அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது

353
house

நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு கனமழை காரணமாக இடிந்து விழுந்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடியும் நிலையில் உள்ளதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று குன்னூர் குறிஞ்சி நகர் பகுதியில் கனமழை காரணமாக வீடு ஒன்று இடிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக அந்த வீட்டில் இருந்தவர்கள் வெளியூர் சென்றிருந்ததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

குறிஞ்சி நகர் பகுதியில் தாயகம் திரும்பிய தமிழர்களுக்காக தமிழக அரசு சார்பில் 1992ஆம் ஆண்டு  75 குடியிருப்புகள் கட்டித்தரப்பட்டது.

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதனால் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு இல்லாமல் வசித்து வருவதாக தெரிவித்த மக்கள், அரசு தங்களுக்கு புதிய வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று வலியுறுத்தினர்