நள்ளிரவில் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டோம் – இந்தோ திபெத் எல்லை காவல் படை

432

சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 20 மணி நேரம் கடுமையாக போரிட்டதாக இந்தோ – திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.

இந்திய – சீன எல்லையான லடாக்கின் கல்வான் பகுதியில் ஜூன் 15ஆம் தேதி இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதையடுத்து, எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டு பதற்றம் நிலவியது.

இதன் பின்னர் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, எல்லையில் படைகள் விலக்கிக்கொள்ளப்பட்டு அமைதி திரும்பியது. இந்நிலையில், சீன வீரர்களை எதிர்த்து, நள்ளிரவில் 17 மணி நேரம் முதல் 20 மணி நேரம் வரை கடுமையாக போரிட்டதாக இந்தோ – திபெத் எல்லை காவல் படை தெரிவித்துள்ளது.

இதுபற்றி இந்தோ -திபெத்திய எல்லை காவல் படை வெளியிட்டுள்ள செய்தியில், தற்காப்புக்காக சீன வீரர்களை கடுமையாக தாக்கி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வீசி தாக்கிய சீன வீரர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாகவும், ஒரு நாள் இரவு முழுவதும் சீன வீரர்களுடன் போரிட்ட போதும், நமது வீரர்கள் குறைந்த அளவிலேயே காயம் அடைந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. வீரர்கள் திறம்பட போரிட்டதுடன், காயமடைந்த நமது வீரர்களையும், அங்கிருந்து பின்னுக்கு கொண்டு வந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு முன்னதாக, தன்னலமற்ற முறையில் தேசத்திற்கு சேவை செய்யும், நமது ஆயுதப் படை வீரர்களின் அழியாத தைரியத்திற்கு வணக்கம் செலுத்துவதாக தெரிவித்துள்ளார்.

அவர்களின் ஒப்பிடமுடியாத தைரியமும், தேசபக்தியும் நம் நாடு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தேசத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும் வீரர்களுக்கு தனது பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆயுதப்படைகளை வலுப்படுத்தவும், அவர்களது குடும்பங்கள் மற்றும் முன்னாள் படைவீரர்களின் நலனை உறுதிப்படுத்தும் வகையில், மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.