இரும்புக்கதவு தலையில் விழுந்ததால் சிறுவன் உயிரிழப்பு..!

341

போரூர், கணேஷ் அவென்யூ, 8-வது தெருவில் வசிப்பவர் ஏழுமலை (38). கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லட்சுமி (34).  இவர்களுக்கு 6 வயதில் விஷால் என்ற மகன் இருந்தார். விஷால் முகலிவாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

 

விஷால் இன்று பள்ளிக்குச் செல்லவில்லை. வீட்டுக்கு அருகில் புதிதாகக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகே விஷால் இரும்புக் கதவைப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தார்.

அந்தக் கதவு எந்தவிதப் பிடிமானமும் இல்லாமல் அமைக்கப்பட்ட நிலையில் அதைப் பிடித்து விளையாடிய சிறுவன் விஷால் மீது எதிர்பாராதவிதமாக சாய்ந்து விழுந்தது. இதில் விஷாலின் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சிறுவன் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததா கட்டிடத்தின் கட்டுமான இன்ஜினீயரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இரும்புக்கதவு முறையாக அமைக்காததே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.