இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் கஜா

855

கஜா புயல் தீவிர புயலாக மாறி பாம்பன் – கடலூர் இடையே நாகை அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கஜா புயல் தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வங்க கடலில் உருவான கஜா புயல் தற்போது சென்னை, நாகையில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

கடலூர் – பாம்பன் இடையே நாகை அருகே இன்று இரவு 11.30 மணிக்கு கரையை கடக்கும் என்று தெரிவித்த புவியரசன், 14 கிலோ  மீட்டர் வேகத்தில் நெருங்கி வந்து கொண்டிருந்த கஜா புயல் தற்போது 9.30 மணி அளவில் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நெருங்கி வருவதாக கூறினார்.

புயல் கரையை கடக்கும் போது 80 கிலோ மீட்டர் முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என புவியசரன் தெரிவித்தார்.

கஜா புயலினால் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் தெரிவித்தார். புயலால் சென்னைக்கு பெரிய பாதிப்பு இருக்காது என்றும் அவர் கூறினார்.

கடலூர், நாகை, தஞ்சை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் புவியரசன் தெரிவித்தார்.

புயல் கரையை கடக்க உள்ளதால் கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், மற்றும் காரைக்காலில் 20 செ.மீ.

அளவுக்கு மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடலோர மாவட்டங்களில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக காணப்படும் என்றும் புயலால் பாதிக்கப்படும் மாவட்டங்களில் சுமார் ஒரு மீட்டர் அளவுக்கு கடல் அலைகள் எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.