சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு

485

சபரிமலை சன்னிதானத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக 200 பேர் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கேரளாவில்  சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபாடு நடத்தலாம் என்று உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு கூறியது.

இந்த தீர்ப்பை அமல்படுத்துவோம் என கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அறிவித்தது.

கோவிலை நிர்வகித்து வரும் திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை அய்யப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும், யாரும் தடுத்து நிறுத்தப்படமாட்டார்கள் என்றும் அறிவித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் கேரள அரசின் நிலைப்பாட்டுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனிடையே பெண்களை சபரிமலைக்கு செல்ல விடாமல் போராட்டக்காரர்கள் தடுத்து திருத்துகின்றனர்.

இனால், சில இடங்களில் தள்ளுமுள்ளு, தடியடி என அப்பகுதி பரபரப்பாக காட்சி அளிக்கிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் நிலக்கல் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நேற்று காவல்துறை பாதுகாப்புடன் செய்தி சேகரிக்க ஆந்திர பெண் பத்திரிகையாளர் ஒருவரும், மற்றொரு பெண் ஒருவரும், சன்னிதானம் நோக்கி சென்றனர்.

அப்போது பெண்களை உள்ளே வர அனுமதிக்க மாட்டோம் என்று சன்னிதானம் அருகே ஆண் பக்தர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்ப கேரள அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் சன்னிதானம் அருகே போராட்டம் நடத்திய 200 பேர் மீது கேரளா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.