ரெட் அலெர்ட்டால் பதறாதீங்க மக்களே… இதுக்கு தான் ரெட் அலெர்ட்டாம்.. – வானிலை ஆய்வு மையம் விளக்கம்

679

வரும் 30ம் தேதி கடலோர மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு எனவும் கனமழை இருக்கும் என்பதால் முன்னெச்சரிக்கைக்காக மே 1ஆம் தேதி மட்டும் ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம் ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆனால் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்படவில்லை என்ற ஆறுதல் தகவலையும் கூறியுள்ளது.

தமிழகத்தை நோக்கி ஏப்ரல் 29 ஆம் தேதி புயல் ஒன்று வர இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதற்கு ஃபனி என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாக இருப்பதாகவும் அது படிப்படியாக தமிழகத்தை நோக்கி நகரும் அதாவது ஏப்ரல் 29 ஆம் தேதி தமிழகத்தில் புயல் கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதனால் கனமழை இருக்கக்கூடும் என்பதால், மேலும், தமிழகத்துக்கு ஏப்ரல் 30, மே 1-ம் தேதி ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

மேலும் புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் 150 கிமீ இருக்கும் என்று சொல்லப்பட்டதால், மீட்பு பணி உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு வருகின்றன.

அதற்கேற்றபடி இன்றே நாகை மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல பாம்பன், கடலூர், புதுச்சேரி துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும் என்று தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது சம்பந்தமாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் சொன்னதாவது:

“சென்னையில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த மண்டலம் நிலை கொண்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி வட தமிழகம் நோக்கி புயல் வரக் கூடும். இதனால் அன்றைய தினம் வடதமிழகம் அருகே புயல் வரும், புயலின் நகர்வைப் பொறுத்தே காற்றோ, மழையோ இருக்கும்.

இப்போதைக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏப்ரல் 28,29 ஆகிய தேதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும்.

அதேபோல, 30ம் தேதி கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. ரெட் அலர்ட் என்பது வானிலை ஆய்வு மையத்தால் தரப்படுவதில்லை.

கனமழைக்கான வாய்ப்புள்ள ஏதேனும் ஒரு பகுதி சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்படும். அவ்வளவுதான்” என்றார்.

இதற்கிடையே இந்த புயலால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்ற கருத்தும் சில தனியார் வானிலை ஆய்வாளர்களால் முன்வைக்கப்பட்டு வருகிறது. எது எப்படியோ, மக்கள் உஷாராக இருந்து கொள்வது நல்லது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of