ஏ பயங்கரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப்புறத்தில் – கவிஞர் வைரமுத்து அறிக்கை

539

எப்படிச் சகிப்போம் காஷ்மீர் ரோஜாக்களில் மாமிசம் வழிவதை. எப்படிப் பொறுப்போம் சிம்லா பனிக்கட்டி சிவப்பாய் உறைவதை. ஏ பயங்கரவாதமே நீ புகுந்தது எல்லைப் புறத்தில் அல்ல கொல்லைப்புறத்தில்.

இந்திய வீரன் எவனும் கள்ளச்சாவு சாகமாட்டான். எங்கள் மரணத்தின் வாசல் நெஞ்சின் பக்கம் உள்ளது, முதுகுப் பக்கமல்ல.உயிரென்ற ஒரு பொருளே உலகின் பெரும்பொருள்.

அதனை மண்ணுங்கீந்த மாவீரர்களே, விழுகிறது உங்கள் பாதங்களில் வெள்ளை ரத்தமாய் எங்கள் கண்ணீர். ஓய மாட்டோம், சாயமாட்டோம், எங்கள் தேசிய கீதத்தில், ஒப்பாரி ராகம் ஒட்டாது,

எங்கள் தேசியக்கொடி, அரைக் கம்பத்தில் நிற்காது. அகிம்சா தேசம் பெயர்ப் பலகையை அவிழ்த்து வையுங்கள் இந்தியா மன்னிக்காது இனியும். மாவீரர்களே! உங்கள் கருகிய சீருடைகளால் பயங்கரவாதத்தின் மீது சவத்துணி போர்த்துவோம்.

இந்தியாவின் கண்ணீரை விரல்களால் அல்ல, துப்பாக்கி முனைகளால் துடைத்தெடுப்போம். நாய்கள் கனவு கண்டால், எலும்பு மழை பெய்யும் நாங்கள் கனவு கண்டால் ஆகாயம் அதிரும், நட்சத்திரம் உதிரும்.

எங்கள் மாவீரர் அஸ்திகளை, கங்கை காவிரியில் அல்ல, சத்ருக்களின் சாப்பாட்டில் கரைப்போம், சமாதானம் மட்டுமல்ல மரணம் கூட ஒருவழிப் பாதை அல்ல.

எம்முயிர் காக்கத்தம்முயிர் ஈந்த தங்கங்களே இதோ! நூற்றுமுப்பது கோடித் தலைகளின் ஒற்றை வணக்கத்தை ஏற்றுக்கொள்ளுங்கள் வீழ்க சூழ்ச்சி, வெல்க வீரம், வாழ்க நாடு, சூழ்க வெற்றி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of