ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஒட்டியவர்களுக்கு புதிய முறையில் பாடம் புகட்டிய போலீசார்

898

சாலை போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டுபவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, ஹெல்மெட் அணியாதவர்களுக்கு உபதேசம் வழங்குதல், விதிமுறைகளை மீறுவோர்களுக்கு போக்குவரத்து நடைமுறைகள் அடங்கிய வீடியோ காட்சிகளை காண்பித்தல் என பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், விதிமுறைகளை மதிக்காமல் வாகனம் ஓட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்நிலையில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு புதிய முறையில் சென்னை போக்குவரத்து போலீசார் பாடம் புகட்டியுள்ளனர். அதன்படி, சென்னையில் நேற்று ஹெல்மெட் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்த போலீசார், அவர்களுக்கு அபராதம் ஏதும் விதிக்காமல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலுள்ள விபத்துப்பிரிவிற்கு அழைத்து சென்றனர்.

அங்கு சாலை விபத்தில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சை பெற்று வருவோர்களை கண்டு அதிர்ச்சியடைந்த வாகனஓட்டிகளிடம் போலீசார், நீங்களும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் இது போன்ற துன்பங்களை சந்திக்க நேரிடும் எனக் கூறினர்.

விபத்தில் சிக்கியவர்கள் படும் துன்பங்களை கண்டு வேதனையடைந்த வாகன ஓட்டிகள் இனி நாங்கள் ஒரு போதும் போக்குவரத்து விதிமுறைகளை மீற மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர். இதனிடையே போக்குவரத்து போலீசாரின் இந்த புதிய முயற்சி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருவதோடு, பலரது பாரட்டுகளையும் பெற்று வருகிறது.

Advertisement