அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு, சுற்றுலா பயணிகள் உடனே வெளியேறியதால் உயிர் தப்பினர்

558

சேலம் அருகே அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலா பயணிகள் உடனே வெளியேறியதால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்வராயன் மலை அருகே முட்டல் பகுதியில் ஆனைவாரி அருவி உள்ளது. இந்த அருவியிலும் அதனை ஒட்டியுள்ள ஓடையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அருவியில் நீர்வரத்து திடீரென்று அதிகரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுற்றுலா பயணிகள் அங்கிருந்து வெளியேற முயன்றனர். அடுத்த சில நிமிடங்களிலேயே   காட்டாற்று வெள்ளம் போல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக மனித சங்கிலி போல் கையைக் கோர்த்துக் கொண்டு ஒவ்வொருவராக வெளியேறினர்.

நல்வாய்ப்பாக அசம்பாவிதம் ஏதுமின்றி அனைவரும் உயிர்தப்பினர். கல்வராயன் மலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தண்ணீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது தெரியவந்தது.