வேலூர் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி விடுதலை

1399

சென்னை: கடந்த ஆகஸ்ட் 9-ம் தேதி அதிகாலை ஜெர்மனியிலிருந்து பெங்களூரு விமானநிலையத்தில் வந்திறங்கிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தியை, தமிழக போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு குறித்து கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி ஜெனீவாவில் நடந்த ஐ.நா. மனித உரிமை மாநாட்டில் திருமுருகன் காந்தி பேசிய வீடியோ யூ டியூப்பில் வெளியானது.

இது தொடர்பாகவே போலீசார் திருமுருகன் காந்தியை தேசதுரோக வழக்கில் கைது செய்ததாக தகவல் வெளியாகியது. இந்நிலையில் திருமுருகன் காந்தியை
சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க மனு அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ஐ.நா மனித உரிமைப் பேரவையில் ஒருவர் பேசியதற்காக, அவர்மீது குற்றம்சாட்ட முடியுமா? எனக் கூறி திருமுருகன் காந்தியை சிறையில் அடைக்க மறுத்து விட்டார்.

இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக கைது செய்த நேரத்தில் இருந்து 24 மணி நேரம் விசாரணை நடத்தலாம் என்று சட்ட நடைமுறை இருப்பதால் திருமுருகன்காந்தியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று போலீசார் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, திருமுருகன் காந்தியிடம் 24 மணி நேரம் மட்டும் போலீசார் விசாரணை நடத்தி விட்டு விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே அவரை போலீசார், சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதன்பின்பு, மாலை வெளியே வந்த திருமுருகன் காந்தியை மீண்டும் போலீசார் கைது செய்தனர். தடையை மீறி ஊர்வலமாக செல்ல முயன்றதாக ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அவர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை எழும்பூர், செங்கல்பட்டு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியதையடுத்து திருமுருகன் காந்தி இன்று வேலூர் சிறையிலிருந்து விடுதலையானார்.

Advertisement