குப்பையை வாய்க்காலில் கொட்டிய நிறுவனம்..! – அதே குப்பையை நிறுவனத்திற்குள் கொட்டிய விவசாயிகள்..!

2719

திருப்பூர் அருகே, வாய்க்காலில் குப்பை கொட்டிய நிறுவனத்துக்குள் அதே குப்பையை மீண்டும் கொட்டி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.திருப்பூரை அடுத்த மாணிக்காபுரத்தில், 140 ஏக்கர் பரப்பளவுள்ள குளம் உள்ளது.

மாணிக்காபுரம் குளத்து நீர்ப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், இந்த வாய்க்கால் முழுவதும் துார் வாரி சுத்தம் செய்யும் பணி கடந்த 10 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்த வாய்க்காலில், பொன்னாபுரம் பகுதியில் கரையோரம் ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பிரின்டிங் நிறுவன விடுதியின் உணவு சமைக்கும் பகுதி மற்றும் சலவை செய்யும் பகுதி, இந்த வாய்க்காலின் கரையோரம் உள்ளது.

இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள், விடுதியிலிருந்து வீசப்படும் குப்பை ஆகியன குவியல் குவியலாக வாய்க்காலில் கொண்டு வந்து நீண்ட காலமாக கொட்டப்படுகிறது.வாய்க்கால் துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் இது குறித்து நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றும், இதை நிறுத்தாமல் நேற்று காலை வரை அங்கு குப்பை கொட்டப்பட்டது.

வாய்க்கால் துார் வாரும் பணியில் இந்த இடத்தை சுத்தம் செய்த போது, அப்பகுதியில் விடுதியிலிருந்து கொட்டப்பட்ட சாம்பல் மற்றும் குப்பை கழிவுகளை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, அதே வளாகத்துக்குள் கொட்டப்பட்டது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது;

வாய்க்காலில் அடைப்பு ஏற்பட இது முக்கிய காரணமாக உள்ளது. பல முறை அறிவுறுத்தியும், விடுதி நிர்வாகம் எதையும் கண்டுகொள்ளவில்லை. நீர் வழித்தடத்தை தடை செய்த குப்பைகளை அது புறப்பட்டு வந்த இடத்துக்கே மீண்டும் அனுப்பினோம்.

இது நீர் நிலைகளை அசுத்தம் செய்வோருக்கு ஒரு பாடமாக இருக்கும். வாய்க்கால் துார் வாரும் பணியின் போது, விவசாயிகள் உடனிருந்து, வாய்க்காலில் குப்பைகளை கொட்ட வந்தவர்களை அறிவுரை கூறி திருப்பி அனுப்பினோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of