“மதியம் ஒரு கட்டிங்.. நைட்டு ஒரு குவாட்டர்… அட டீ காசும் இருக்குப்பா..” – பின்னலாடை நிறுவனத்தின் சர்ச்சை விளம்பரம்..!

465

திருப்பூர் மாநகரில் பின்னலாடை நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில் பல்வேறு தையல் இயந்தரங்களில் வேலை பார்க்க வரும் தொழிலாளர்களுக்கு மதுவுடன் சம்பளம் என விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது சமூக ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 22 ஆயிரத்துக்கு மேற்பட்ட பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் இயங்கி வருகிறது. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஜாப்-ஒர்க் நிறுவனங்கள் குடிசை தொழி்ல் போல் இயங்கி வருகிறது. பின்னலாடை உற்பத்தி சார்ந்த நிறுவனங்களில் தமிழகத்தை சார்ந்த தொழிலாளர்கள் ஆர்வம் காட்டாததால் பல்வேறு மாநிலங்களை சார்ந்த 2 லட்சத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர்.

இந்நிலையில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்களையும், தொழிலாளர்களையும் கேவலப்படுத்தும் விதமாக மர்ம நபர் ‘ பின்னலாடை நிறுவனத்திற்கு வேலைக்கு வரும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் மதியம் ஒரு கட்டிங், இரவு ஒரு குவார்ட்டர் மற்றும் டீ காசு வழங்கப்படும்’ என, சிறிய அளவிலான தட்டிபோர்டுகள், பதாகைகளில் விளம்பரம் வைத்துள்ளார்.

இதை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த விஷம விளம்பரத்தால் பின்னலாடை நிறுவனங்களின் மீது அவநம்பிக்கை ஏற்படும் அபாயம் உள்ளது. இது போன்ற செயல்களில் ஈடுபட்ட மர்ம நபர் மீது போலீசில் புகார் கொடுக்க பின்னலாடை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து, ஆர்பிட்ரேஷன் கவுன்சில் தலைவர் கருணாநிதி கூறியதாவது:டெய்லர் கிடைக்காமல் நிறுவனங்கள் சிரமப்படுவது உண்மைதான்; அதற்காக, மது வாங்கி கொடுத்து, தொழிலாளரை சேர்க்கவேண்டிய தரம் தாழ்ந்த நிலைக்கு தொழில்முனைவோர் செல்லவில்லை.

டெய்லர் கிடைக்காத விரக்தியிலோ அல்லது வேடிக்கையாகவோ, யாரோ சிலர், டெய்லருக்கு இரண்டு வேளை மது வாங்கி தருவதாக போலியாக விளம்பரம் மற்றும் ஆடியோ பதிவுகளை உருவாக்கி பரவச் செய்துள்ளனர்.

இது, ஒட்டுமொத்த தொழில் துறையினருக்கும் அவப்பெயர் ஏற்படுத்தியுள்ளது. இதுபோல், வீண் வதந்திகளை பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, கருணாநிதி கூறினார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of