எலிமருந்து தடவிய தேங்காயால் சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்..

482

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே விளைநிலத்தை சேதப்படுத்தும் எலிகளை கொல்ல எலிமருந்து தடவி வைக்கப்பட்டிருந்த தேங்காயை தின்ற 7 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பழங்கோயில் கிராமத்தில் உள்ள இருளர் காலணியில் 25-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். 4 குடும்பங்களைச் சேர்ந்த திலீபன், பூமிகா, புகழேந்தி, பூவரசு, மோகன், சுபாஷினி, வேதகிரி ஆகிய 7 சிறுவர்கள்  அப்பகுதியில் உள்ள விவசாய விளைநிலத்தில் விளையாடிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளனர்.

வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் பெற்றோர்கள் கண் முன்னே வீட்டில் வாயில் நுரை தள்ளியவாறு மயங்கிய நிலையில் சிறுவர்கள் விழுந்துள்ளனர். இதனை பார்த்த  அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் அருகில் உள்ள கலசபாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுவர்களை கொண்டு சென்றனர்.

அங்கு சிறுவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று. அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஏழு சிறுவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விசாரணையில் எலிகளை கொல்ல எலிமருந்து தடவி வைக்கப்பட்டிருந்த தேங்காயை சிறுவர்கள் அறியாமல் திண்றது தெரியவந்துள்ளது.