சென்னை முழுவதும் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழை

469

வெப்பச்சலனம் காரணமாக சென்னை முழுவதும் விடிய விடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அமைந்தகரை, அண்ணாநகர், வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சென்னை புறநகர் பகுதிகளான வானகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூந்தமல்லி, திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது. திருவள்ளூர் மாட்டம் திருத்தணி, திருவாலங்காடு, ஊத்துக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

நீலகிரி மாவட்டம் குன்னூர். வண்டிச்சோலை, வெலிங்டன், கோத்தகிரி ஆகிய பகுதிகளில் காலை முதல் சாரல் மழை பெய்து வந்த நிலையில், மாலையில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி, வேப்பூர், தொழுதூர், பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. இதனால் நகரின் முக்கிய பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.  இதேபோன்று விழுப்புரம், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்தது.