ஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை

1262

“ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்… அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன்…

ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்”.

இந்திய சுதந்திரத்திற்காக வீரமுழக்கமிட்டு இந்தியாவில் ஒரு பன்முகத்தன்மை ஆட்சி செய்த ஒரு மாமன்னரைக் கண்டு குலைநடுங்கி ஆங்கிலேயன் எழுதிய கடிதம் தான் அது….

அவர்தான் திப்பு சுல்தான்… மைசூரின் புலி என்றழைக்கப்பட்ட அவர், 1782 ஆம் ஆண்டு முதல் 1799 ஆம் ஆண்டு வரை மைசூரை சிறப்பாக ஆட்சி செய்தார்.

மதநல்லிணக்கத்திற்கு முன்னதாரணமாக திகழ்ந்த திப்புசுல்தான், அனைத்து தரப்பு மக்களையும் தனது ஆட்சி காலத்தில் சரிசமமாக நடத்தினார்.

 நவம்பர் 20 ஆம் தேதி  1750 ஆம் ஆண்டு, மைசூர்-தேவனஹள்ளியில், ஹைதர் அலி –  பாக்ர்-உன்னிசா தம்பதிக்கு மகனாக பிறந்த இவர்,

பிரித்தானியப் படையோடு மோதிய இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்து, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். 

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பெண்களின் கண்ணியத்திற்கு பாதுகாவலனாய் இருந்தார் திப்பு.

ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு விரட்டுவதற்காக பிரான்சின் மாவீரன் நெப்போலியனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

மூன்றாம் மற்றும் நான்காம் ஆங்கில-மைசூர்ப் போர்களில் பிரித்தானிய அரசினாலும் அதன் கூட்டுப் படைகளினாலும் தோற்கடிக்கப்பட்டார்.

“கிழக்கிந்திய கம்பெனியின் குலை நடுக்கம் ” திப்புவின் மைசூர் அரசைப் பார்த்து லண்டன் பத்திரிகைகள் வியந்தனர்.”ஆம் நான் அவனைக்கண்டு அஞ்சுகிறேன்.அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களை போன்றவன் அல்ல.மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தை கண்டும் நான் அஞ்சுகிறேன்.

ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிர்ஷ்டம்”.என்று கடிதம் எழுதினான் மார்க்வெஸ் வெல்லஸ்லி.

“ஆடுகளைப் போல 2௦௦ ஆண்டுகள் பிழைப்பதை விட புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று மரணப்படுக்கையில் முழங்கினார் திப்பு.

திப்புவின் பொற்கால ஆட்சி

அக்காலத்திலேயே கலப்பின விதைகள், உயர்ரகப் பயிர்கள் என்று விவசாயத்தில் பல புதுமைகளைப் புகுத்தினார்.
கப்பல் கட்டும் தளம் அமைத்தார். இப்போதுள்ள பொதுவிநியோகத்திட்டம் அவர் ஆட்சியில் அப்போதே செயல்பாட்டில் இருந்தது.

கிராமங்களும் நகரங்களுக்கு சமமான வளர்ச்சியை அடைந்தன.
போரில் ராக்கெட் தாக்குதல்களை நடத்திய திப்பு சுல்தானின் போர் யுக்திகள் வரலாற்றில் ஒரு சரித்திரமாக பேசப்படுகிறது.

இதற்கு சான்றாக, வாலோபஸ் விண்வெளி நிலையத்தில் உள்ள ஒரு சித்திரத்தில் போரில் ஆசியர்கள் ராக்கெட் பயன்படுத்தும் படம் உள்ளதையும் அது மைசூர் போரில் திப்பு சுல்தான் படை ஆங்கிலேயர் மீது நடத்திய தாக்குதலைக் குறிப்பதையும் மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் கண்டு வியந்தார்.

முதல் இராணுவ ஏவுகணைகள்

முதன்முதலாக திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைத் தொழில்நுட்பமே பிற்கால பிரிட்டிஷாரின் ஏவுகணைத் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக அமைந்தது.

இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள ரோதுண்டா அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பார்க்க இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பலமுறை முயற்சி செய்தார்.

உலக அளவில் முதல் இராணுவ ஏவுகணைகள் அவையே என்பதையும் பிற்காலத்தில் பிரிட்டிஷார் ஆய்வு நடத்தி அவற்றை திருத்தியமைத்து பயன்படுத்தியதையும்,

மேலும் இது இந்தியாவில் திப்பு சுல்தானின் சொந்த தொழில்நுட்பம் என்பதையும், பிரெஞ்சு நாட்டினரிடம் இருந்து கற்றது அல்ல என்பதையும் ‘சர் பெர்னார்டு லோவல்’ எனும் பிரபல பிரிட்டிஷ் விஞ்ஞானி எழுதிய ’விண்வெளி ஆராய்ச்சிகளின் தோற்ற மூலங்களும், பன்னாட்டுப் பொருளாதாரங்களும் (The Origins and International Economics of Space Explorations) எனும் நூலின் உதவியோடு அப்துல் கலாம் நிரூபித்தார்.

காரன் வாலீஸின் சிலை
திப்பு சுல்தானுக்கு ஆதரவாக இருந்தவர்களை சூழ்ச்சியாலும், அவரை மைசூர் யுத்தத்திலும் தோற்கடித்த காரன் வாலீஸ், ஸ்ரீரங்கப்பட்டின உடன்படிக்கையின்படி பணத்திற்காக திப்புவின் இரண்டு மகன்களையும் பணயமாக பிடித்து வைத்துக் கொண்டான்.

சென்னை கோட்டை அருங்காட்சியகத்தில் உள்ள காரன் வாலீஸ் சிலையில் சரணடைந்த திப்புவின் மகன்களை தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டிருக்கிறது.

துரோகத்தின் சின்னமாக கருதப்பட்ட இந்த சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், காரன் வாலீஸ் சிலை சென்னையில் ஊர்ப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.

2015 ஆம் ஆண்டு திப்பு சுல்தான் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் லண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தில் 6 மில்லியன் பவுண்டுகள் வசூலானது.

பல்வேறு சோதனைகளை தன் வசமாக்கிய மைசூர் புலி என அழைக்கப்படும் திப்பு சுல்தான், இந்திய சுதந்திரத்திற்காகவும்,தேச ஒற்றுமைக்காகவும் தன் வாழ்க்கையை அற்பணித்தார் என்றால் அது மிகையல்ல…

1799 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி நடந்த ஆங்கிலேயருக்கெதிரான யுத்தத்தில் முன்னின்று போராடி தன் உயிரை இந்திய தேசத்திற்காக தியாகம் செய்தார் திப்பு சுல்தான்… 

அவரின் உதிரம் இந்த மண்ணில் செலுத்தப்பட்ட தினம் தான் மே 4…

அப்படிப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வீரரின் தியாகத்தை இந்த நாளில் நினைவு கூர்வோம்…

-எழுதுகோல் கர்ஜனை

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of