கருணாநிதியின் திரைப்பயணம்..! வியக்க வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள்..!

2590

திரையுலகில் பயணித்த கலைஞர் கருணாநிதி, தனது அனல் பறக்கும் வசனங்கள் மற்றும் கதைக்களங்கள் மூலம் தமிழ் சினிமாவை புதிய பாதைக்கு கொண்டு சென்றார். அவரது புரட்சி படைப்புகள் மக்களிடம் தமிழ் உணர்வை ஊட்டியது மட்டுமின்றி, மூட நம்பிக்கைகளை ஒழித்தன என்றால் அது மிகையல்ல. இதோ கருணாநிதியின் திரைப் பயணம் பற்றிய சில சுவாரஸ்யத் தகவல்களை தற்போது பார்க்கலாம்….

கருணாநிதியின் எழுத்தில் முதன்முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், ‘பழனியப்பன்’. இது கடந்த 1944ம் ஆண்டு திருவாரூர் பேபி டாக்கீஸில் நடத்தப்பட்டது. ‘தூக்குமேடை’ நாடகத்தின் போது தான் ஆ.சு.ராதா, கருணாநிதிக்கு ‘கலைஞர் ‘ பட்டம் கொடுத்து பாராட்டினார்.

ஆரம்ப காலத்தில் நாடகங்கள் மூலம் தனது எழுத்து வன்மையை கூர் பார்த்த கருணாநிதியின் இலக்கு சினிமாவாக இருந்திருக்க வேண்டும். அதற்கான முயற்சியில் அவர் ஈடுபட்டபோது, 1947 ல் ‘ராஜகுமாரி’ படம் கருணாநிதிக்கு முதல் வாய்ப்பை தந்தது. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த ‘ராஜகுமாரி’ படம் மூலம் கருணாநிதி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அப்படத்தின் வசனகர்த்தாவாக திரைத்துறைக்குள் நுழைந்த கருணாநிதிக்கு அப்போது வயது 23 தான். பயமறியாத அந்த வயதில், திராவிடர் கழகம் அவர் கைகளில் திணித்த வலுவான பேனாவால், அவரது வசனத்தில் கேலிகளும் கேள்விகளும் துள்ளின. திராவிடர் கழகம் உருவான 1944-க்கும், திமுக உருவான 1949-க்கும் இடைப்பட்ட ஐந்து ஆண்டுகளில், கருணாநிதி திரைத் துறையில் தனது அழுத்தமான சுவடுகளை பதித்தார்.

எவ்வளவு பேசினாரோ, அவ்வளவு எழுதினார். ‘ராஜகுமாரி’ செய்யாததை 1950 ல் வெளியான ‘மந்திரிகுமாரி’ செய்தாள். ‘திராவிட இயக்க’ கருணாநிதியின் ‘ஏவுகணை’ எழுத்தை முதன் முதலில் பளீரென அடையாளம் காட்டியது மந்திரிகுமாரி தான். 1952 -ல் கருணாநிதியின் வசனத்தில், சிவாஜி கணேசனின் நடிப்பில் வெளியான பராசக்தி படம் தமிழ் சினிமாவின் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றே சொல்லலாம்.

மூட நம்பிக்கைக்கு எதிரான கருணாநிதி எழுதிய அனல் தெறிக்கும் வசனங்கள், நீதிமன்ற காட்சிகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சாகாவரம் பெற்றவை. ‘சிங்கத் திருநாடே நீ சிலந்திக் கூடாக மாறியது எப்போது? வந்தாரை வாழ வைக்கும் வளமிகு தமிழகமே நீ சொந்த நாட்டானையே சுரண்டுவது எத்தனை நாட்களாக? என்று ‘பராசக்தி’ யில் கருணாநிதி தீட்டிய வசனம் இன்றும் கேட்பதாகவே அமைந்துள்ளது.

இவரது சினிமா எழுத்து எதிராளியை கை நீட்டி இழுத்து போட்டு அடிக்காது. ரத்தம் வராமல் உள்ளடியாக நாசூக்காக தாக்கும். சிரித்துக்கொண்டே ஊசியால் குத்தும் சாமர்த்தியம் கருணாநிதியின் எழுத்துக்கு சற்று கூடுதலாகவே உண்டு. பராசக்தி படத்தின் ஒவ்வொரு வசனமும் ‘ நறுக் சுருக் ‘ என்று இருக்கும்.

சுவாமி, நாதா, சொப்பனம் என பேசிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் சட்டையை பிடித்து உலுக்கி, தமிழ் சினிமாவுக்கு புதிய தமிழ் ரத்தம் பாய்ச்சிய பெருமை கருணாநிதிக்கு உண்டு.

தனது திரைப்பயணத்தை கருப்பு வெள்ளை திரையில் ராஜகுமாரி மூலம் 1947ல் தொடங்கிய கருணாநிதி, 2011ம் ஆண்டு வெளியான நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ள பொன்னர் சங்கர் படம் வரை சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார்.
கருணாநிதியின் கலைப்பயணமும் அரசியலும் இருப்புப் பாதையின் இணை பாதைகளாக இயங்கின.

‘பராசக்தி’ படத்தில் பிச்சைக்காரர்களுக்கு பரிந்தெழுதிய அதே பேனாவில் பிச்சைக்காரர் மறுவாழ்வு திட்டத்துக்கு கருணாநிதி கையொப்பமிட்டது, படைப்பாளிக்கும் போராளிக்கும் கிடைத்த வரலாற்று பெருமையாகும். தமிழ்ப்பட உலகில் பெரும் திருப்புமுனை உண்டாக்கிய அவரின் எழுத்துக்கள் வீரம், காதல், சோகம், துள்ளல், நையாண்டி, தத்துவம் என்று அனைத்து பரிமாணங்களிலும் விளையாடியது .

தமிழ்த் திரையுலகில் கருணாநிதியின் காலம் என்பது மறு மலர்ச்சி காலம் என்றே சொல்லலாம். கருணாநிதி கதை வசனகர்த்தாவாக மட்டும் அல்லாமல், ஒரு தயாரிப்பாளராகவும் உருவானார், மேகலா பிக்சர்ஸ், அஞ்சுகம் பிக்சர்ஸ், கலை எழில் கம்பைன்ஸ், பூம்புகார் புரடொக்ஷன்ஸ் ஆகிய பட நிறுவனங்களின் சார்பில் 29 படங்களை தயாரித்தார்.

64 ஆண்டுகளில் 75 திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாடு, மொழி, மதம், சமூக வேறுபாடுகளை தகர்த்து எறிந்தவர் கருணாநிதி, நுற்றாண்டு கண்டுள்ள இந்த இந்திய சினிமாத் துறையில் 70 ஆண்டு தொடர்ந்து நடைபயின்றவர் என்ற பெருமையும் கருணாநிதிக்கு உண்டு.

வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் தன் ஆளுமையை பதித்த கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொலைக்காட்சித் தொடர், ‘ஸ்ரீ ராமானுஜர்’ – மதத்தில் புரட்சி செய்த மகான். இப்படி தனது எழுத்து ஆளுமையால் திரைத்துறையில் முத்திரை பதித்த கருணாநிதி, இன்று காற்றில் கலந்தாலும், காவியமாக அவர் வடித்த எழுத்துக்கள் அவரது புகழை பாடிக் கொண்டே இருக்கும்…

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of