மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் ஏன்? – தமிழக அரசு விளக்கம்..!

251

மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.


தமிழகத்தில் அடுத்த மாதம் நிச்சயம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று தமிழக அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர ஒப்புதல் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், நேற்று அமைச்சர்கள் யாரும் இந்த தகவலை உறுதி செய்யவில்லை.

செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த துணை முதல்வர் பன்னீர்செல்வமும், மறைமுக தேர்தல் குறித்து முடிவு செய்யவில்லை, அப்படி செய்தால் தெரிவிக்கிறேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயர்கள், நகராட்சி தலைவர்கள் மற்றும் பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், மறைமுக தேர்தல் குறித்து அறிவிப்புக்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், “மேயர் ஒரு கட்சியை சேர்ந்தவராகவும் கவுன்சிலர்கள் மற்ற கட்சியை சேர்ந்தவர்களாகவும் இருக்கும் சூழல் ஏற்படும் போது நிர்வாகம் பாதிக்கப்படுகிறது. வேறு வேறு கட்சியை சேர்ந்தவர்களாக இருப்பதால் சில சமயங்களில் மாநகர, நகர மன்றக் கூட்டங்களை கூட்டுவதே சிக்கலாகி விடுகிறது.

மறைமுக தேர்தலால் நிலையான அமைப்பு உருவாகும். அனைத்து உறுப்பினர்களுக்கும் பொறுப்பு கூடும். மறைமுக தேர்தலால் உள்ளாட்சி அமைப்புகள் சுமூகமாக செயல்படும்.

அதிகமான கவுன்சிலர்களை கொண்ட சென்னை, மதுரை போன்ற இடங்களில் சிறப்பாக பணியாற்ற இம்முறை வழிவகுக்கும். மறைமுக தேர்தலே சிறப்பான நிர்வாகத்தை கொடுக்கும் என்ற பரிந்துரைகள் மக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து கிடைத்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of