TNPSC விடைத்தாள் வழக்கின் நடவடிக்கை ரகசிய இடைக்கால அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

460

சத்தியம் தொலைக்காட்சி அம்பலப்படுத்திய TNPSC விடைத்தாள் மெகா மோசடி ஊழல் எப்படி நடந்து என்றும் இதுவரை அந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பதும் அடங்கிய ரகசிய இடைக்கால அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற TNPSC குரூப் 1 தேர்வில் விடைத்தாள்களை வெளியே எடுத்து திருத்தி, அதிக மதிப்பெண்கள் வழங்கியது தொடர்பான மோசடியை, விரிவான ஆதாரங்களுடன், சத்தியம் தொலைக்காட்சி சிறப்புச் செய்தி வெளியிட்டது.

இதனை மேற்கொள்காட்டி தொடரப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் முன்னிலையில் விசாரனைக்கு வந்தது. அப்போது மத்திய குற்றபிரிவு போலீசார் TNPSC விடைதாள் முறைகேடு தொடர்பாக இதுவரை என்ன விசாரணை நடைபெற்று உள்ளது என்ற, ரகசிய இடைகால அறிக்கையை நீதிமன்றத்திற்கு மட்டும் தாக்கல் செய்தனர்.

மேலும் 74 விடைதாள்களை தடவியயல் கணினி ஆய்வுக்கு அனுப்பி இருப்பதாகவும், TNPSC அதிகாரிகளை மேலும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டியிருப்பதால், முழுமையான அறிக்கை தாக்கல் செய்ய மூன்று மாதம் கால அவகாசம் கோரினர்.

இதனையடுத்து, நீதிபதிகள் டிசம்பர் 5 தேதி முழுமையான விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அப்போது திருநங்கை ஸ்வப்னா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புருஷோத்தமன், அப்போலோ பயிற்சி மையத்தில் படித்த 62 மாணவர்கள் மட்டும் எப்படி தேர்வாகினர் என்றும், அவர்களை விசாரித்தால் முறைகேடுகள் பற்றிய மேலும் தகவல் வெளியாகும் என கூறினார்.

தற்போது அரசு பணியில் உள்ள 74 பேர் TNPSC-க்கு ஆதரவாக இருப்பார்கள் என்பதால், நேர்முகத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களை எதிர் மனுதாரர்களாக சேர்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் முறைகேடுகள் தொடர்பான மேலும் பல உண்மைகள் வெளிவரும் என வாதிட்டார். இதை கேட்ட நீதிபதிகள் இது தொடர்பாக புதிய மனு தக்கால் செய்ய உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.