திருநங்கைகள் இரு குழுக்களாக மோதிக் கொண்டதில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு

381

காஞ்சிபுரம் அருகே திருநங்களை இரு குழுக்களாக மோதிக் கொண்டதில், ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. மோதல் தொடர்பாக போலீசார் 17 பேரை கைது செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. அங்குள்ள திருநங்கைகள் இரு குழுக்களாக செயல்படுகின்றனர். ஒரு தரப்பினர் கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட சுய தொழில் செய்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர் பாலியல் உள்ளிட்ட தவறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்தது. தவறான செயல்களில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆதவராக உள்ள ரவுடிகள், கடந்த மாதம் சுய தொழில் செய்யும் திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தி வீடுகளுக்கு தீ வைத்தனர்.

இதனால் பாதிக்கப்பட்ட திருநங்கைகள் காவல் துறையில் முறையிட்டனர். இதையடுத்து திருநங்கைகள் குடியிருப்பு பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது.

கேமராக்கள் பொருத்தப்பட்டது பாலியல் தொழிலில் ஈடுபடும் திருநங்கைகளுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் மற்றொரு தரப்பு திருநங்கைகள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் ஒருவருக்கு தலை மற்றும் முகத்தில் அரிவாள் வெட்டு விழுந்தது. சிலர் படுகாயம் அடைந்தனர். இந்த மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 17 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.