விஷமருந்திய மனைவியை 3 கி.மீ.தூரம் தோளில் சுமந்து சென்றும் காப்பாற்ற முடியாததால் கலங்கிய கணவன்

964

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்திலுள்ள நர்நூர் பகுதியின் அருகேயுள்ள குக்கிராமம் ஒன்றில் ராதோட் ராம் என்னும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். வறுமையில் வாடிய ராதோட் ராம் விவசாயம் மேற்கொள்வதற்காக ராம் ஜாதவ் என்பவரிடம் ஐந்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பருத்தியை பயிரிட்டுள்ளார். இதன் விளைச்சல் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்த ராதோட் ராமிற்கு கடந்த மாதம் பெய்த பலத்த மழை பேரிடியாக அமைந்தது.

மழையால் பருத்தி பயிரானது முற்றிலும் மூழ்கி நாசமாகியதால் ராதோட் ராமின் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. இந்நிலையில் கடந்த திங்களன்று ராதோட் ராம் தனது மனைவி புஷ்பலதாவுடன் மழையால் பாதிக்கப்பட்ட பயிரை காணச்சென்றார்.

அங்கு மழைநீரில் மூழ்கிய பயிர்களை பார்த்து வேதனை அடைந்த புஷ்பலதா தன் கையில் மறைத்து வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து வயலிலே மயங்கி விழுந்தார். இதை சற்றும் எதிர்பாராத ராதோட் ராம், தன் மனைவியை காப்பாற்ற நர்நூர் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

தனது கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு சரியான சாலைவசதி இல்லாததால் 3 கி.மீ தூரத்திற்கும் அதிகமாக தோளில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளார்.அங்கு மயங்கிய நிலையிலிருந்த புஷ்பலதாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதையடுத்து புஷ்பலதாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ராதோட் ராமிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் விஷம் அருந்திய மனைவியை ராதோட் ராம் தோளில் சுமந்து சென்ற காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இறந்த புஷ்பலதா மற்றும் ராதோட் ராம் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of