முத்தலாக் தடைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் – வலுக்கும் எதிர்ப்பு

524

அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய மந்திரி சபை நேற்று ஒப்புதல் அளித்தது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் 17-ந்தேதி தொடங்க இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம் நேற்று டெல்லியில் நடந்தது. இதில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகின்றன.

மந்திரிசபையின் ஒப்புதல் பெறப்பட்ட மசோதாக்களில் முத்தலாக் தடை மசோதா முக்கியமானதாகும். முத்தலாக் முறை மூலம் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதை தடை செய்யும் வகையில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் 2 முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டன.

பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக பாராளுமன்றத்தில் மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால் அந்த 2 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் கிடப்பில் உள்ளன. தற்போது புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் புதிதாக மசோதா தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டி உள்ளது. அதன்படி இந்த முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த பாஜக ஆட்சியில் முத்தலாக் தடை சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியது.

முத்தலாக் விவகாரத்தில் ஒரு சிலரின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களின் சட்டத்தை தடை செய்வதை ஏற்கமுடியாது என இஸ்லாமியர்கள் தரப்பில் எதிர்ப்புகள் வலுத்தது. ஒரு சிலர் முத்தலாக் முறையை தவறாக கையாள்வதாகவும் அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இஸ்லாமிய கோட்பாட்டில் முத்தலாக்கிற்கு என்று சில வரைமுறைகள் உள்ளது எனவும், இதனை சரியாக பின்பற்றாதவர்களால், முத்தலாக் சட்டத்தை தடை செய்ய மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்துவது சிறுபான்மை மக்களை ஒடுக்கும் செயல் என முஸ்லிம் அமைப்புகளும், எதிர்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்பொழுது மீண்டும் முத்தலாக சட்டத்தை தடை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of