“தமது மிகச் சிறந்த நண்பர் மோடி” – டிரம்ப் கையெழுத்து

503

சபர்மதி ஆசிரமத்திற்குள் காலணிகளை கழற்றி வைத்துவிட்டு, உள்ளே சென்ற அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி அங்கிருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்திற்கு கைத்தறி துணிநூலால் நெய்யப்பட்ட கதர்மாலையை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, டிரம்ப்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் பிரதமர் மோடி ஆசிரமத்தை சுற்றிக்காட்டினார். அப்போது, அங்கிருந்த 3 குரங்கு பொம்மைகளை சுட்டிக்காட்டி, தீயதை பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதை பேசாதே என்பதை வலியுறுத்துவதை டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கினார்.

பின்னர் அங்கிருந்த ராட்டினத்தை மனைவியுடன் சுற்றிய டிரம்ப், அதில் நூல் நூற்பது குறித்த விளக்கங்களை கேட்டறிந்தார். இதனைத் தொடர்ந்து, திண்ணையில் அமர்ந்து, சபர்மதி ஆசிரமத்தின் பெருமைகளை டிரம்புக்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.

இதையடுத்து, சபர்மதி ஆசிரம பார்வையாளர் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் அவரது மனைவியும் கையெழுத்திட்டு அங்கிருந்து புறப்பட்டனர். அந்த பதிவேட்டில் தமது மிகச் சிறந்த நண்பர் நரேந்திர மோடிக்கு, இந்த சிறப்பான பயணத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி என்று கூறி டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

Donald-Trump-India-VisitSign