புதுச்சேரி நல்லவாடு மீனவ கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

437

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் புதுச்சேரி அரசுடன் இணைந்து புதுச்சேரி அருகே உள்ள நல்லவாடு மீனவ கிராமத்தில் சுனாமி பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தியது.

மாவட்ட ஆட்சியர் அபிஜித் விஜய் சவுத்ரி தலைமையில் நடைபெற்ற ஒத்திகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தீயணைப்புதுறை, காவல்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முதலில் இன்னும் சற்று நேரத்தில் சுனாமி வரப்போகிறது என்று ஒலிபெருக்கியில் போலீசார் எச்சரித்தனர். இதனைக் கேட்டதும் அங்கிருந்த மீனவ கிராம மக்கள் பீதியடைந்து மேடான பகுதிகளை நோக்கி சென்றனர்.

மேலும் கடலில் மூழ்குவது போல நடித்துக் கொண்டிருந்தவர்களையும், வீட்டில் இருந்து உடனடியாக வெளியேற முடியாத வயதான மூதாட்டிகளையும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.

இதனால் அந்த பகுதி சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்புடன் காணப்பட்டது. இந்த சுனாமி ஒத்திகை நிகழ்ச்சியில், மீனவ கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என சுமார் 200 க்கும் மேற்பட்டோர் மீட்கபட்டு ராஜீவ்காந்தி அரசு கல்லூரியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர்.