நோட்டா கூட போட்டி போடுறவங்களுக்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா? – தமிழிசையை கலாய்த்த டிடிவி

782

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில், அதிமுக மற்றும் பாஜகவை கடுமையாக கிண்டலும், கேலியும் செய்து விமர்சனம் செய்தார்.

சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார் டிடிவி தினகரன். அப்போது தனது கட்சி தேர்தல் அறிக்கை மார்ச் 22ம் தேதி வெளியிடப்படும் என்றார்.

அப்போது அவர் கூறியதாவது;
நாங்கள் அடுத்த கட்சிகளைப் பார்த்துக் கொண்டு வேட்பாளர்களை அறிவிப்பது கிடையாது.

ஓசூர் சட்டசபை இடைத் தேர்தல் தொகுதிக்கான, வேட்பாளரை தேர்வு செய்து கொண்டுள்ளோம், விரைவில் அறிவிப்போம். உங்கள் பார்வையில் தான் அதிமுக வைத்துள்ளது மெகா கூட்டணி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஏற்கனவே சொன்னது போல அது ஒரு மானங்கெட்ட கூட்டணியாகும். மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளனர்.

அது ஒரு மாபெரும் தோல்வி கூட்டணி. எல்லா கூட்டணியுமே, தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் வெற்றி தோல்வியை அறிந்து கொள்ளும். ஆனால் கூட்டணி அமைத்த அன்றே தோல்வியுற்ற கூட்டணி இதுவாகத்தான் இருக்கும். அதை பற்றி பேசி உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கிறேன்.

மதுரை மண்டலம் மட்டுமல்ல, சென்னை மண்டலம், தொண்டை மண்டலம், கொங்கு மண்டலம் அல்லது தெற்கில் உள்ள பகுதிகளாக இருக்கட்டும், அனைத்து மண்டலங்களிலும் எங்கள் கட்சிக்கு ஒரே மாதிரி ஆதரவு உள்ளது. தேர்தல் முடிவுகளில் உங்களுக்கு அந்த விஷயம் தெரியும். தேர்தல் தொடர்பாக மேதாவிகள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் பொய் என்று தேர்தல் முடிவு வெளியாகும் போது தெரியவரும்.

பண மூட்டையுடன் நின்றால் தான் ஜெயிக்க முடியும் என்றால் 40 தொகுதிகளிலும் தொழிலதிபர்களை தான் வேட்பாளர்களாக நிறுத்த வேண்டும். அப்படியெல்லாம் நினைத்தால் மாபெரும் தோல்விதான் கிடைக்கும். மக்களால் ஒதுக்கப்பட்ட கட்சிகளை எல்லாம், பத்திரிகையாளர்கள்தான் பெரிய கட்சிகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
நான் ஆணவத்தில் சொல்லவில்லை. ஆளும் கட்சி கூட்டணியை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நாங்களும் அதை பொருட்படுத்தவில்லை. நாங்கள் பல கட்டமாக வேட்பாளர்களை அறிவிப்போம்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா தலைமையில் இயங்கிய ஒரு இயக்கம், இப்போது துரோகிகள் கையில் சிக்கியுள்ளது. வீடு வீடாக சென்று கூட்டணிக்கு ஆள் பிடித்துக்கொண்டு உள்ளார்கள். இதுபோல ஜெயலலிதா காலத்திலும், எம்ஜிஆர் காலத்திலும் நடந்ததே கிடையாது. விசித்திரமான ஒரு கூட்டணியாக உள்ளது அது. தொகுதி பங்கீடு செய்து கொள்வதற்குள்ளேயே, பாதி முடி அவர்களுக்கு போய்விட்டது. இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.

ஆர்.கே.நகரில் 20 ரூபாய் டோக்கனுடன், மக்கள் தினகரனை தேடி காத்துக் கொண்டிருக்கிறார்கள், என்று தமிழிசை கூறியுள்ளாரே, என்ற நிருபர்களின் கேள்விக்கு, நோட்டா உடன் போட்டி போடுபவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என்று சிரித்தபடி பதில் அளித்தார் டிடிவி தினகரன்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of