தூத்துக்குடியில் பயங்கரம் – 2 மாத கர்ப்பிணி பெண்ணுடன் கணவன் வெட்டிக்கொலை..!

1576

துாத்துக்குடி அருகே, காதல் திருமணம் செய்த தம்பதியை கொடூரமாக வெட்டிக் கொன்ற, பெண்ணின் தந்தை கைது செய்யப்பட்டார். மேலும் பலரை, போலீசார் தேடி வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், குளத்துார் பெரியார் நகர் காலனியைச் சேர்ந்தவர் சோலைராஜ் 24. குளத்துாரை அடுத்த பல்லாகுளத்தை சேர்ந்த அழகர் மகள் ஜோதி, 21; இருவரும் உப்பள நிறுவனத்தில் பணி செய்தனர்.இருவரும் காதலித்த நிலையில், ஜோதியின் வீட்டில், திருமண ஏற்பாடு செய்தனர்.

காதல் குறித்து, பெற்றோரிடம் ஜோதி தெரிவித்தார். சோலைராஜ், ஜோதி இருவரும், வெவ்வேறு பிரிவினர். இதனால், ஜோதியின் குடும்பத்தினர், திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை. இதனால், ஜோதி, மூன்று மாதங்களுக்கு முன், சோலைராஜ் வீட்டிற்கு சென்று விட்டார்.

இருவரும் குளத்துார் போலீசில் தஞ்சம் அடைந்தனர்.இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர். பின், கோவில்பட்டி கோவிலில், இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின், சோலைராஜின் தாயார் முத்துமாரியுடன், பெரியார்நகர் காலனி வீட்டில் வசித்தனர். இந்நிலையில், ஜோதி அணிந்திருந்த தோடு, மூக்குத்தி போன்றவற்றை, அழகர் தரப்பினர் திரும்ப பெற்றனர்.

இதனால், கொலை செய்யப்படுவோம் என்ற அச்சம், இருவருக்கும் இருந்தது. பாதுகாப்பு கேட்டு, குளத்துார் போலீஸ், விளாத்திகுளம், டி.எஸ்.பி., அலுவலகத்தில், சோலைராஜ் மனு கொடுத்திருந்தார்.

நேற்று முன்தினம் இரவு, மின்சாரம் தடைபட்டதால், சோலைராஜ் – ஜோதி தம்பதி, வீட்டின் முற்றத்தில் படுத்திருந்தனர். அப்போது, அங்கு வந்த கும்பல், இருவரையும் அரிவாளால், சரமாரி வெட்டி கொன்று தப்பியது.

நேற்று காலை, சோலைராஜின் தாயார் எழுந்து வந்தபோது, இருவரும் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.உடல்களை பரிசோதனைக்கு எடுத்துச் செல்ல விடாமல், சோலைராஜின் உறவினர்கள், மறியலில் ஈடுபட்டனர்.

போலீசாரின் சமரசத்துக்கு பின், உடல்கள் எடுத்து செல்லப்பட்டன.ஜோதியின் தந்தை அழகர் மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர். அழகரை, நாலாட்டின்புதுாரில் நேற்று மாலை கைது செய்தனர்.

வேறு ஜாதிகளை சேர்ந்தவர்கள், காதல் திருமணம் செய்து கொள்ளும் போது, எதிர்ப்பு தெரிவிக்கும் பெண் குடும்பத்தினர் ஆணவக் கொலை செய்வது, தமிழகத்தில் அதிகரித்து வருகிறது

குளத்துாரில்,இரு பிரிவை சேர்ந்தவர்கள் காதல் திருணம் செய்து கொண்ட நிலையில், ஆணவக் கொலை நடந்திருப்பது, போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜோதி, 2 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்.

Advertisement