தூத்துக்குடி மாவட்ட காவல்துறை SP பணியிட மாற்றம்..! அதிரடி நடவடிக்கை..!

632

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நீதித்துறை நடுவர் பாரதிதாசன் விசாரணை நடத்தச் சென்ற போது டி.எஸ்.பி. பிரதாபன்,ஏ.எஸ்.பி.குமார் ஆகியோர் முன்னிலையில் மாஜிஸ்டிரேட் மிரட்டப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் பணியிடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தூத்துக்குடி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயராஜ் – பென்னிக்ஸ் உயிரிழந்த சம்பவத்தைத்தொடர்ந்து, காவல்துறையினர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், காவல்துறை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறை உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரவி கணேஷ் ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நீதித்துறை நடுவரை மிரட்டிய காவலர் மகாராஜனும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

நீதித்துறை நடுவரை மிரட்டியபோது உடனிருந்த டிஎஸ்பி பிரதாபன், ஏ.எஸ்.பி குமார் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடி எஸ்.பி. அருண் பாலகோபாலன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தடயங்களை அழிக்க முயன்றனர் எனவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் மாஜிஸ்திரேட் குற்றம் சாட்டியுள்ளார். சிசிடிவி காட்சி பதிவுகள் அழிக்கப்பட்டடிருந்தன எனவும் அவர் தெரிவித்தார். கூடுதல் எஸ்பியும், டிஎஸ்பியும் நிகழ்விடத்தில் இருந்தும் விசாரணைக்கு ஒத்துழைப்பு இல்லை என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

சாட்சி ஆவணத்தில் கையெழுத்திட மறுத்த பெண் காவலர், உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதியளித்த பின்னரே கையெழுத்திட்டார் என்று மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார். லத்தி மற்றும் மேஜையில் ரத்தக் கறை இருந்தது சாட்சியம் மூலம் தெரியவந்தது என்றும், லத்தியை கேட்டபோது காவலர் மகாராஜன் ஒருமையில் பேசியதாகவும், மற்றொரு காவலர் தப்பியோடிவிட்டார் என்று பாரதிதாசன் அறிக்கையில் கூறியுள்ளார்.

ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணையை தொடங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை CBCID DSP அனில்குமார் இன்றே விசாரணையை தொடங்க வேண்டும் என்று நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர்.

CBI விசாரணை தொடங்குவதற்குள் தடயங்களை அழிக்க வாய்ப்பு இருப்பதால் நீதிபதிகள் CBCID விசாரணை தொடங்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதனிடையே மாஜிஸ்திரேட் புகார் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்  நாளை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement