தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு

926

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையிலான குழுவினர் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவது என தமிழக அரசு அரசாணையை வெளியிட்டு ஆலைக்கு சீல் வைத்தது.ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வேதாந்தா நிறுவனம் டெல்லி பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, ஸ்டெர்லைட் ஆலையால் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை விசாரிக்க வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் தலைவராக மேகாலயாவின் முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய தூத்துக்குடிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தருண்அகர்வால் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு இன்று மாலை வருகிறது என்றும், இந்த குழு உப்பாற்று ஓடை அருகே கொட்டப்பட்டுள்ள தாமிரதாது கழிவுகளை மாலையே ஆய்வு செய்யும் எனக் கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை நாளை காலை 8 மணிக்கு நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் மட்டுமே குழு ஆய்வு செய்யும் எனவும் தேவைப்பட்டால் வெளியிலும் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய், காவல்துறை, மாசுகட்டுப்பாட்டு துறையினர் உடனிருப்பார்கள் என்று குறிப்பிட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெறும் கூட்டத்தில் பொதுமக்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் எனக் கூறினார்.

Advertisement