“யார்கிட்டையும் சொல்லிடாத’’.. டியூசன் வந்த சிறுமியிடம் கணவன் சில்மிஷம்.. – மிரட்டிய ஆசிரியை..!

2605

கடந்த நவம்பர் மாதத்தில் சென்னை தி.நகரில் டியூஷனுக்குச் சென்ற மாணவிக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் டியூஷன் ஆசிரியை சஞ்சனா, அவரின் ஆண் நண்பர் பாலாஜி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபத்தில் அவர்கள் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நவம்பர் மாதத்தில் ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் டான்ஸ் வகுப்புக்குச் சென்ற மாணவிக்கு பாலியல்ரீதியாக தொல்லை கொடுத்த மாஸ்டர் கைது செய்யப்பட்டார். அவருக்கு வயது 53.

தற்போது, ஆவடியில் டியூஷன் படிக்கச் சென்ற இடத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல்ரீதியான தொல்லை நடந்துள்ளது. அதன்பேரில் டியூஷன் ஆசிரியை விஜயலட்சுமி (32), அவரின் கணவர் நரேஷ்(33) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபாராணி, சப்-இன்ஸ்பெக்டர் கீதா ஆகியோர் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “ஆவடி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ். ஆட்டோ டிரைவர். இவரின் மனைவி விஜயலட்சுமி.

இவர் அந்தப் பகுதியில் உள்ள நர்சரி பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிவருகிறார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், வீட்டில் விஜயலட்சுமி டியூஷன் சென்டர் நடத்திவந்தார். அவர் பணியாற்றும் பள்ளியில் படிக்கும் சில மாணவ, மாணவிகள் டியூஷன் படித்துவந்தனர்.

விஜயலட்சுமி பணியாற்றிய பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியும் அவரின் தம்பியும் டியூஷன் படித்தனர். கடந்த 15 நாள்களுக்கு முன் விஜயலட்சுமி வீட்டில் இல்லை. அப்போது டியூஷன் படிக்க வந்தவர்கள் மட்டும் வீட்டில் தனியாக இருந்தனர்.

அவர்களில் 2-வகுப்பு மாணவியிடம் விஜயலட்சுமியின் கணவர் நரேஷ் பேசினார். பின்னர் அந்த மாணவியை தனியாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். அப்போது அந்த மாணவியிடம் அவர் தவறாக நடந்துள்ளார். பின்னர், இங்கு நடந்ததை வெளியில் சொல்லக் கூடாது என மிரட்டியுள்ளார். அதனால் மாணவியும் அமைதியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் விஜயலட்சுமி வீட்டில் இல்லை. மாணவ, மாணவிகள் மட்டும் படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நரேஷ், 2-வது வகுப்பு மாணவியிடம் தவறாக நடந்துள்ளார்.

சிறிது நேரத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த விஜயலட்சுமி, நடந்த சம்பவத்தைக் கேள்விப்பட்டு மாணவியிடம் விசாரித்துள்ளார். மாணவி கூறிய தகவலால் அதிர்ச்சியடைந்தவர், இந்தச் சம்பவத்தை வெளியில் சொல்ல மாட்டேன் என சத்தியம் செய்யுமாறு கூறியுள்ளார். அதன்படி மாணவியும் சத்தியம் செய்துள்ளார்.

டியூஷன் படிக்க வந்த குழந்தைகளை அழைத்துச் செல்ல மாணவியின் அம்மா வந்துள்ளார். அவரிடம் மாணவியின் தம்பி, `அக்கா டியூஷனில் அழுதாள்’ என்று கூற முயன்றுள்ளார். அதை விஜயலட்சுமி சைகை மூலம் தடுத்துள்ளார்.

அதைக் கவனித்த மாணவியின் அம்மா, இருவரையும் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், `டியூஷனில் என்ன நடந்தது?’ என்று குழந்தைகளிடம் கேட்டுள்ளார். அப்போது மாணவியின் தம்பி, `டியூஷனில் அக்காவிடம் நரேஷ் அங்கிள் தவறாக நடந்து கொண்டார், அதனால் அக்கா அழுதாள்’ என்று கூறினான்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், விஜயலட்சுமியிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டனர். `அப்படியொரு சம்பவம் நடக்கவில்லை’ என்று முதலில் கூறினார். ஆனால், மாணவி தரப்பினரோ, `எல்லாம் எங்களுக்குத் தெரியும். உங்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவுள்ளோம்’ என்று கூறினர்.

அதைக்கேட்ட விஜயலட்சுமி, `என் கணவர் செய்த தவற்றுக்காக உங்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்கிறேன்’ என்று மாணவி தரப்பினரிடம் கெஞ்சியுள்ளார்.

உடனே மாணவி தரப்பினரும் வீட்டுக்குச் சென்றுவிட்டனர். இதையடுத்து மாணவி, அவரின் தம்பி ஆகியோர் பள்ளிக்குச் செல்லவில்லை. ஆசிரியை விஜயலட்சுமி, வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். வீட்டுக்குச் சென்ற மாணவியின் பெற்றோர், காவல் நிலையத்தில் கடந்த 14-ம் தேதி புகார் கொடுத்தனர்.

அதன்பேரில் விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவர் நரேஷ், குற்றத்தை மறைத்த ஆசிரியை விஜயலட்சுமி ஆகியோரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளோம்” என்றனர்.

ஆட்டோ டிரைவர் நரேஷ், போலீஸாரிடம் `புத்திகெட்டு தவறு செய்துவிட்டேன், என்னை மன்னித்துவிட்டுவிடுங்கள்’ என்று கதறி அழுதுள்ளார். அதைப்போல விஜயலட்சுமியும், போலீஸாரிடம் கண்ணீர்மல்க கெஞ்சியுள்ளார்.

ஆனால் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், `இருவரையும் கைது செய்தால்தான் இந்தச் சம்பவம் மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கும்’ என்று கூறியுள்ளனர்.

Advertisement