தண்ணீருக்காக நடைபெற்ற கொலை! தண்ணீர் பஞ்சத்தால் நடந்த கொடூரம்!

1004

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ளது உளுந்தங்குடி. இந்த கிராமத்தை சேர்ந்தவர் தனபால் (38), இவரது மனைவி கலைமணி (30). இவர்களது வீட்டுக்கு எதிரே உள்ள வீட்டில் வசிப்பவர் ரமேஷ், சாந்தி தம்பதி. தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் இந்த பகுதியில் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்து உள்ளது.

இந்த பகுதியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. வாரம் 2 நாள் மட்டுமே தண்ணீர் வரும். அதுவும் 1 மணி நேரம் தான் வரும். முண்டியடித்துக் கொண்டு தண்ணீர் பிடிக்க வேண்டிய நிலைமை.

இந்நிலையில், தனபால் குடும்பத்தினர் கூடுதலாக 2 குடம் தண்ணீர் பிடித்து உள்ளனர். இதை ரமேஷ் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு முன் விரோதம் உண்டானது. நேற்று முன்தினம் அந்த கிராமத்தில் காதுகுத்து, பூப்புனித நீராட்டு என பல நிகழ்ச்சிகள் நடந்தன.

இதில் கறிவிருந்து போடப்பட்டது. இதற்காக ரமேசின் மகன் பிரவீன் (25) நேற்று முன்தினம் இரவு மது அருந்தி உள்ளார்.போதையில் இருந்த பிரவீன் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை தட்டிக்கேட்ட ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டார்.

நேற்று அதிகாலை 2 மணிக்கு தனது வீட்டில் இருந்த உருட்டு கட்டையை எடுத்துக்கொண்டு தனபால் வீட்டுக்கு சென்றார். வெளி வராண்டாவில் தனபால் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது, உருட்டு கட்டையால் தனபால் நெற்றியில் ஓங்கி அடித்துள்ளார்.

இதில் ரத்தவெள்ளத்தில் தனபால் இறந்தார். சத்தம் கேட்டு தனபால் குடும்பத்தினர் வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். அதற்குள் பிரவீன் தப்பி ஓடிவிட்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மண்ணச்சநல்லூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி தப்பி ஓடிய பிரவீனை கைது செய்தனர்.

இதேபோன்று சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், அமரேசன் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் ஆதிமூல ராமகிருஷ்ணன் (40). இவர், தமிழக சபாநாயகரின்கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மோகன் (30) என்பவர் வீட்டில் கடந்த 13ம் தேதி இரவு தண்ணீர் வராததால், குடியிருப்பு வளாகத்தில் உள்ள மின் மோட்டாரை இயக்கி உள்ளார்.அப்போது அங்கு வந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், ”தண்ணீர் இல்லையென்று நீ எப்படி தன்னிச்சையாக மோட்டாரை இயக்கலாம்,” என கேட்டுள்ளார்.

இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மோகனின் மனைவி சுபாசினி (28), ”எப்படி எனது கணவரை அடிக்கலாம்,” என்று கேட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த ஆதிமூல ராமகிருஷ்ணன், தனது வீட்டு சமையல் அறையில் இருந்த கத்தியை எடுத்து வந்து சுபாசினி முகத்தில் சரமாரியாக குத்தினார். படுகாயமடைந்த சுபாசினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில், சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து, ஆதிமூல ராமகிருஷ்ணனை கைது செய்தனர். தண்ணீருக்காக கொலை செய்யும் அளவிற்கு தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியுள்ளது.

இதனால் அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் அணைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.