முத்தலாக் தடை அவசரச் சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்

1363

மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடை விதிக்கும் வகையில், இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்ட மசோதா மக்களவையில் நிறைவேறியது.

ஆனால், இந்த மசோத மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முத்தலாக் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மூன்று திருத்தங்களுடன் கொண்டு வரப்பட்ட இந்த அவசர சட்டத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து முத்தலாக் தடை அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இந்த அவரச சட்டத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக ஜாமீன் பெற முடியாது என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டு, முத்தலாக தடை சட்டத்தில் கைது செய்யப்படுவோர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறலாம் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

முத்தலாக் வழங்கிய பின் கணவன், மனைவி சேர நினைத்தால் அபராதம் செலுத்தி மீண்டும் சேர்ந்து வாழலாம். முத்தலாக் சட்டத்தில் கணவன், மனைவி குடும்பத்தினர் மட்டுமே புகார் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 3 திருத்தங்களுடன் அவசர சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

Advertisement