பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும்

489

அடையாளம் தெரியாத கோழிப் பண்ணைகளிலிருந்து பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக சமூகநலத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டின் சத்துணவு திட்டத்தின் கீழ் 220 கோடி மதிப்பில் முட்டை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்த புள்ளிகளை தமிழக அரசு கோரியது. அதில் வெளிமாநில கோழிப் பண்ணைகள் பங்குபெற தடை விதிக்கப்பட்டது.

மேலும் தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து மண்டல வாரியாக ஒப்பந்த புள்ளிகள் சமர்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து கோழிபண்ணை நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன் முட்டை டெண்டருக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டார். இந்த தடையை நீக்ககோரி தமிழக சமூக நலத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், முட்டை கொள்முதல் அரசின் கொள்கை முடிவு என்றும், வெளிப்படைச் சட்டத்தின் கீழ்தான் டெண்டர்கள் கோரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டைகள் தொற்றுநோய் பரவாத முட்டைகளாக இருக்க வேண்டும் என்றும், இதற்காக தொற்றுநோய் பரவாத கோழிப் பண்ணைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட முட்டைகள் வாங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத கோழிப் பண்ணைகளிலிருந்து பதப்படுத்தப்படாத முட்டைகளை அனுமதித்தால், மாணவர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே முட்டை டெண்டருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.