“கூடா நட்பு” “கேடாய் முடியும்”

362

இதுவரை இல்லாத அளவில், கடந்த சில வருடங்களாக பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகள் நாளுக்குநாள் அபாயகரமாக அதிகரித்த வண்ணமே உள்ளது, ஆனால் அது உண்மையல்ல, ஆதி காலம் முதலே பெண்களுக்கு எதிரான செயல்பாடுகள் அரங்கேறிவருவதாகவும், தற்கால சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் இவை இப்போது அடிக்கடி வெளிச்சத்திற்கு வருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஐந்து வயதோ, ஐம்பது வயதோ ! வயது எதுவாயினும் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகளின் அடுக்கு நெஞ்சை பதறவைக்கிறது. மூன்று வயது பெண்குழந்தை பாலியியல் வன்கொடுமை செய்து கொலை, 70 வயது மூதாட்டி பாலியியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை. உடலில் பாதி, பெண்மை கொண்ட ஒரே காரணத்தால் பல திருநங்கைகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கொலை என்று சொல்லவே நாகூசும் சம்பவங்கள் அனுதினம் நடந்து கொண்டுதான் உள்ளது.

பெண்ணை காக்கவே பலத்துடன் படைக்கப்பட்டவன் ஆண், ஆனால் இன்று உண்மை ஆண்மகன்கள் பலர் வெட்கி தலைகுனிகின்றனர் சிலரால். அச்சிலர்க்கு ஒப்பாக மிருகங்களை கூட குறிப்படக்கூடாது எனலாம்.

“மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற் றன்று”.

மனத்தால் நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை எந்த ஒரு வகையாலும் அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது என்பது வள்ளுவன் வாக்கு. முறையான நடப்பு நம்மை நெறிப்படுத்தும், ஆனால் “கூடா நட்பு” கேடாய் முடியும்”. கடந்த சில நாட்களாக தமிழக மக்களின் முழு பார்வையும் பொள்ளாட்சியின் மீதுதான் உள்ளது என்றால் அது மிகையல்ல, 200க்கும் மேற்பட்ட இளம் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, அது படமாக்கப்பட்டுள்ள அவலம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் பிடிபட்டிருக்கும் அத்தனை இளைஞர்களும் நண்பர்களே. நேர்வழிப்படுத்த வேண்டிய நண்பனே தகாத வழியில் இட்டுச்சென்றுருக்கிறான், தாயும், தந்தையுமான நண்பனே சதைவேட்டையாட சொல்லி கொடுத்திருக்கிறான். பிற இனம் காக்க வழி சொல்லித்தரும் நண்பனே பெண்ணினத்தை சூறையாட குறுக்கு வழி கற்றுக்கொடுத்திருக்கிறான். தனக்கும் தங்கை உண்டென்று எண்ணத்தை எப்படி மறந்தானோ தெரியவில்லை. அழுகுரல் கேட்டும் இணங்கா உள்ளம் எப்படி வந்தது என்பதும் புரியவில்லை.

தான் செய்வது தவறென்று அவரகள் அறியா உள்ளம், வரக்காரணம் அவர்கள் உடன் உலவிய நட்பே. தாய் தந்தையோடும், உடன்பிறப்புகளோடும் கூட பகிரமுடியாத விஷயங்களை நட்பிடம் மட்டுமே பகிர்கிறோம். நண்பர்கள் முறையாய் இருந்திருந்தால், நாம் செய்வது தவறென்று ஒருவன் உணர்ந்திருந்தால் இத்துணை வலியும் வேதனையும் வந்திருக்காது. பல பெண்களின் வாழ்வும் சீரழிந்திருக்காது. சக உயிரை மதியாது உலகில் எதும் நிலையது. பொல்லாநட்பு இருப்பினும் உயிர்தரும், நெறிதரும் நல்ல நட்பும் உயர்ந்த அளவில் இங்கு உள்ளது.

அதேசமயம் பெண்களும் சில முறை தங்களுக்கு நிகழும் வன்கொடுமைகளுக்கு தாங்களே காரணமாக மாறுகின்றனர் என்பதும் சில ஆய்வுகளின் முடிவு. “பதின் வயது” ஒவ்வொரு மனிதனுக்கும் “மழலை மொழி” மாறி “தவளை குணமாகும்” வயது. ஆண்களை விட பெண்கள் மிகவும் பக்குவப்பட வேண்டிய வயது. தற்கால தொழில்நுட்பத்தால் விரல் நுனியில் வந்துவிட்ட உலகத்தை தவறாய் பயன்படுத்துவதன் முடிவாக தடம்மாறி போகின்றனர் பெண்கள். தகாத நட்பு, ஆசை பேச்சு, கவர்ச்சியான விளம்பரம் என்று அவர்கள் கண்முன் கிடக்கும் அத்துணைக்கும் அடிமையாகி இறுதியில் உயிரினும் மேலான கற்பையும் பின் அந்த உயிரையும் இழக்கிறார்கள்.

இது பெண்களுக்கு எதிரான உலகமோ, ஒரு பாலின ஆதிக்கம் கொண்ட நாடோ அல்ல, மாறாக பெண்ணை தெய்வமென வணங்கும் பூமி. சதைத்தின்னும் ஓநாய்கள் உலாவினாலும் தாயாய், தங்கையாய் கட்டிய மனைவியாய், பெற்ற பிள்ளையாய் பெண்களை பேணிக்காக்கும் ஆண்களும் இங்கு உண்டு. உலகம் முழுதும் பெண்களுக்கு எதிராய் நடக்கும் இந்த கொடுமைகளுக்கு ஒரே தீர்வாய் பலரும் கருதுவது “தனிமனித ஒழுக்கம்” என்ற ஒன்றே.

நெறியான பேச்சு, நேர்கொண்ட பார்வை, உறுதியான உள்ளம் என்ற மூன்றும் கொண்ட பெண்ணை யாராலும் அசைக்க முடியாது என்பதே உண்மை. இன்று பொள்ளாச்சியில் நடந்தேறியிருக்கும் இந்த கொடூரத்தை வேரோடு அறுத்தெறிவதே முறை. இறுதியில் சட்டம் தன் கடமையைச்செய்யும் என்பதை நம்புவோம் நாமும் விழிப்போடு இருப்போம்.

– லியோ (வலை அணி)