உ.பி-யை உலுக்கிய கோர விபத்து.. 20 பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

554

சரக்கு லாரியும் – சொகுசு பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி கொண்டு விபத்துக்குள்ளானதில் தீப்பற்றியது. இந்த தீயில் 20 பேர் கருகி பலியாகினர்.

பலர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், உயிர்பலி அதிகமாகும் என்று அஞ்சப்படுகிறது.. உத்திரபிரதேசத்தில் இந்த துயர சம்பவம் சம்பவம் நடந்துள்ளது.

உபியை சேர்ந்த தனியார் சொகுசு பஸ் ஒன்று ராஜஸ்மான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு நேற்றிரவு சென்று கொண்டிருந்தது.. படுக்கை வசதியுடன் கூடிய ஆம்னி பஸ் அது.. மொத்தம் 45 பயணிகள் இருந்தனர்.

ஃபரூகாகத் என்ற பகுதியின் ஹைவேயில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே ஒரு சரக்கு லாரி வந்தது.. எதிர்பாராத விதமாக சரக்கு லாரியும், பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

வாகனங்கள் இரண்டுமே பயங்கர சத்தத்துடன் மோதிக் கொண்டதால், பஸ்ஸில் இருந்த டீசல் டேங்க் வெடித்து சிதறி தீப்பிடிக்க ஆரம்பித்தது.. டீசல் என்பதால் மளமளவென பஸ் முழுவதும் வேகமாக பரவ ஆரம்பித்தது.. இதை பார்த்து அலறிய பயணிகள் பஸ்ஸில் இருந்து குதித்து தப்ப முயன்றனர்.

ஆனால் பல பயணிகள் அந்த தீயிலேயே சிக்கி கொண்டு கருகிவிட்டனர்.. எப்படியும் 20 பேர் இந்த தீயில் இறந்திருக்கலாம் என்கிறார்கள்.. பஸ்ஸில் இருந்து ஜன்னல் வழியாக குதித்தவர்கள், மீட்கப்பட்டவர்கள் எல்லாருமே சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு தன்னூஜ் மாவட்ட போலீசார் விரைந்து வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.. ஒரேயடியாக 20 பேருமே பஸ்ஸில் கருகி இறந்த சம்பவம் உபி மாநிலத்தை கடுமையான அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தங்களுடைய இரங்கலை தெரிவித்துள்ளனர்.

“விபத்தில் பலர் உயிர் இழந்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன்” என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல, விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாயும்,

காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்க உபி அரசு முடிவு செய்துள்ளதாகவும், விபத்து தொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் அறிக்கை கேட்டிருப்பதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். 20 பயணிகளும் அலறியபடியே தீயில் சிக்கி உயிரிழந்த இந்த சம்பவம் உபி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது.

Advertisement